இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் கலகலப்பான வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 24, 2026 அன்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது.
பெஸ்டி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், இளம் தலைமுறையினரின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காமெடி, காதல், நட்பு மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.
நம்மைச் சுற்றி தினமும் நடைபெறும் சாதாரண சம்பவங்கள், சரியான மனிதர்களும் எதிர்பாராத சூழ்நிலைகளும் ஒன்றிணையும்போது எப்படி பெரிய கலாட்டாவாக மாறுகின்றன என்பதையே இப்படம் சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் பதிவு செய்ய உள்ளது. நட்பு, காதல், குடும்ப உறவுகள், தவறான புரிதல்கள் என பல்வேறு அம்சங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே உணர்வுகள் என, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் முக்கிய கிரியேட்டிவ் கூட்டணியாக டாக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சீயோன் ராஜா இணைந்துள்ளனர். டாக்டர் எஸ். கார்த்திகேயன் கதை, வசனம் மற்றும் தயாரிப்பு பொறுப்புகளை ஏற்க, சீயோன் ராஜா திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். டாக்டர் எஸ். கார்த்திகேயன் உருவாக்கிய கதையையும் கதாபாத்திரங்களின் உலகத்தையும் சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்து, தனது தனித்துவமான இயக்குநர் பார்வையில் திரைக்கு கொண்டு வருகிறார் சீயோன் ராஜா.
இப்படத்தில் ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். மேலும் ரமேஷ் கண்ணா கதாநாயகனின் தந்தையாகவும், சுஜாதா (பருத்திவீரன்) தாயாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் அஸ்மிதா (மஸ்காரா), கஞ்சா கருப்பு, லொள்ளு சபா சுவாமிநாதன், மதுரை காளையன் மற்றும் சிங்கமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இளம் நடிகர்களின் துடிப்பான நடிப்புடன், அனுபவம் வாய்ந்த நடிகர்களின் காமெடி டைமிங்கும் இணைவதால், படத்தின் கலகலப்பான தருணங்கள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு வினோத் பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயா முருகன் கலை இயக்குநராகவும், விக்னேஷ் ராஜா இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். வினு சுந்தரம் மேலாண்மை பணிகளை கவனிக்கிறார். Beaulet ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறது. மக்கள் தொடர்புப் பணிகளை பரணி அழகிரி மேற்கொள்கிறார்.
இளமைத் துடிப்பு நிறைந்த காட்சியமைப்பு, ரசிக்க வைக்கும் இசை, இயல்பான கதாபாத்திரங்கள் மற்றும் கலகலப்பான சம்பவங்கள் என ஒவ்வொரு அம்சத்திலும் ரசிகர்களுக்கு வித்தியாசமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க படக்குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
இயக்குநர் சீயோன் ராஜா இயக்கிய ‘பொதுநலன்கருதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கியுள்ள ‘சமூகவிரோதி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இளம் தலைமுறையின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட இந்த புதிய திரைப்படம் மூலம் மற்றொரு வித்தியாசமான களத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.
ஒருபுறம் இளமை, மறுபுறம் குடும்பம், நடுவில் காதலும் நட்பும், இவை அனைத்தையும் சுற்றி கலகலப்பான சம்பவங்கள் என உருவாகும் இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
காமெடி, காதல், நட்பு மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த இந்த புதிய திரைப்படம், ஜென்-ஸி தலைமுறையினரையும் குடும்ப ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் உருவாகி வருகிறது.