மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களைச் சந்திக்க தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் பதிப்பு வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஒரு நடுத்தர வயது ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதை டிரெய்லர் உணர்த்துகிறது. இருவருக்குமான வயது வித்தியாசம், அவர்களுக்குள் உருவாகும் ஈர்ப்பு மற்றும் காதல், அதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தின் பார்வை என பல்வேறு அம்சங்களை சுவாரஸ்யமாக முன்வைக்கும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளது.
வழக்கமான காதல் கதைகளிலிருந்து சற்று மாறுபட்ட உறவை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில், காதலுடன் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் கலந்து சொல்லப்பட்டிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது. அதேநேரம், கதாபாத்திரங்களுக்கு இடையே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் அமைந்துள்ளன.
இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து கிரண் ஜோசி கதை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பாவனா ஸ்டூடியோஸ் (Bhavana Studios) தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் Future RunUp Films வழங்கி விநியோகம் செய்கிறது. தமிழகத்தில் இப்படத்தை Primark Productions நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழில் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. வித்தியாசமான காதல் உறவை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கலந்து உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர்: