“You Are Next” – மிரட்டும் எம்.எஸ். பாஸ்கர்… வெளியானது ‘விடியும் காத்திரு’ ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Friends Production House சார்பில் பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோரின் படங்களுக்கான கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், ‘விடியும் காத்திரு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அம்ஜதா ஷெரின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கோபி அயோத்தி காவலர் கதாபாத்திரத்திலும், பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

ஒரு கொலை நடைபெற்ற வீட்டிற்குள் விசாரணைக்காகச் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நிகழும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. க்ரைம் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன், அமானுஷ்ய சம்பவங்களையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம், தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மர்மமான பின்னணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பெரிதாக்கப்பட்ட கதவின் சாவித் துவாரத்தின் வழியே பயத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. அதனுடன் கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன இயக்குநராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

க்ரைம், த்ரில்லர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘விடியும் காத்திரு’, எம்.எஸ். பாஸ்கரை இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் காண்பிக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 

Comments (0)
Add Comment