நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படக்குழுவினரின் சிறப்பான ஒத்துழைப்பால் திட்டமிட்ட காலத்தைவிட முன்னதாக, வெறும் 40 நாட்களில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் ‘தகப்பன்’, அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
40 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு
படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயன் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் M. சுகுமார் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பு ஆகியவற்றின் காரணமாகவே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டு, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்த படப்பிடிப்பு
‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற தொடக்க விழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. மதுரை நகரிலும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் மேலவளவு கருப்பு கோயிலில், படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரக் காட்சிகளும் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவினருக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவை கொண்டாடிய படக்குழு
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலூர் மேலவளவு கருப்பு கோயிலில் கிடா வெட்டி, அப்பகுதி பொதுமக்களுக்கு விருந்து வழங்கி, அவர்களுடன் இணைந்து படப்பிடிப்பு நிறைவு மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர்.
படப்பிடிப்பின்போது தங்களுக்கு ஆதரவளித்த அப்பகுதி மக்களுடன் இணைந்து படக்குழுவினர் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது அப்பகுதி மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து கதை
‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, ஜீவா முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. அப்பா–மகன் உறவு மற்றும் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தியுள்ள இப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன்இசையமைக்கிறார்.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன்படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார்.
நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து கதைக்களம், அப்பா–மகன் உறவு மற்றும் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.