பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெற்றிகரமான விநியோகத்தில் கவனம் பெற்ற Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்தின் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
‘ரைட்டர்’ படத்தின் இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை எழுதி இயக்குகிறார். வித்தியாசமான கதைக்களத்தில், டார்க் ஹியூமர் மற்றும் திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.
இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர்கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures நிறுவனத்தின் ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
படப்பிடிப்பை தொடங்கி வைத்த விக்ரம் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன்
படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து படக்குழுவினரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியான சூழலையும் உருவாக்கியது.
இப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வலுவான தொழில்நுட்பக் கூட்டணி
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.Kபடத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப்பயிற்சியை கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபுவுடன் இளம் தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், டார்க் ஹியூமர் மற்றும் திரில்லர் அம்சங்களை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.