“கடலில் 20 கி.மீ. தூரம்… சவாலான படகு துரத்தல்… ‘மண்டாடி’ இசை வெளியீட்டு விழாவில் சுவாரஸ்ய தகவல்கள்!”

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பீட்டர் ஹெய்ன், மகிமா நம்பியார், சுஹாஸ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் உருவான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

RS Infotainment நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’, பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மக்களின் கடல்சார் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன், ஸ்டண்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.

கடலின் நடுப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டுள்ள ‘மண்டாடி’யின் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம் நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ள படகு துரத்தல் காட்சிகள், இயற்கையான சூழலிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பையும், டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ ஆகியோர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

விழாவில் பேசிய படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், கடலில் முழுமையாக ஒரு திரைப்படத்தைப் படமாக்குவது மிகவும் கடினமான விஷயம் என்று குறிப்பிட்டார். பொதுவாக கடலில் சில காட்சிகளை மட்டும் படமாக்கிவிட்டு, மற்ற காட்சிகளை கிரீன் மேட் மற்றும் VFX மூலம் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் ‘மண்டாடி’ படத்தை முழுவதுமாக கடலிலேயே படமாக்கியிருப்பது தயாரிப்பாளரின் சினிமா மீதான ஆர்வத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்துவதாகவும் கூறினார். மேலும், இந்தப் படத்திற்குப் பிறகு சூரி மிகப்பெரிய இடத்திற்குச் செல்வார் என்றும், சத்யராஜின் தோற்றம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

நடன இயக்குநர் அசார், தன்னை முதலில் அங்கீகரித்தவர் ஜி.வி. பிரகாஷ் குமார் என்றும், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிருடன் ‘சுப்பிரமணியபுரம்’ காலத்திலிருந்தே பயணித்து வருவதாகவும் கூறினார். ‘மண்டாடி’யின் பாடல் காட்சிகளை ஏசி செட்டில் படமாக்கியதாகவும், படப்பிடிப்பின் இடைவெளியில் நேரம் கிடைத்தபோது சூரி வந்து நடனமாடியதாகவும், மகிமா நம்பியார் சிறப்பாக நடனமாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சண்டை இயக்குநர் மகேஷ் மேத்யூ, இப்படத்திற்காக சூரி மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்ததாக பாராட்டினார். மேலும், உண்மையான மீனவர் தோற்றத்தில் சத்யராஜை பார்த்தபோது படக்குழுவினர் அனைவரும் வியந்ததாகவும் தெரிவித்தார்.

நடிகர் மிதுன் பேசும்போது, படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுஹாஸ் நிஜ வாழ்க்கையில் மிகவும் அழகான மனிதர் என்று குறிப்பிட்டார். தான் இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களையும் இயக்குநர் பார்க்கவில்லை என்றாலும், இந்த கதாபாத்திரத்திற்கு தான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்பி வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் சுமார் 29 நாட்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் சூரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, தங்களுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அனைவரும் சோர்வடைந்த நிலையிலும் சூரி சிறிதும் சோர்வின்றி தொடர்ந்து பணியாற்றியது தங்களுக்கும் உத்வேகமாக இருந்ததாக தெரிவித்தார்.

நடிகை கிருத்திகா, இப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார். வளர்ந்து வரும் கலைஞர்களின் போராட்டங்களைப் புரிந்து கொண்டு ஊக்கமளிக்கும் வகையில் இயக்குநர் மதிமாறன் பேசியதற்கும் நன்றி தெரிவித்த அவர், மிதுனுடன் இணைந்து நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்ததாக கூறினார்.

நடிகர் பால சரவணன், ‘மண்டாடி’ படத்தை பட்ஜெட் அல்லது பிரம்மாண்டத்தை வைத்து மட்டுமல்லாமல், படக்குழுவினரின் உழைப்பை வைத்தே ஒரு மாபெரும் படைப்பு என்று சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் சூரியின் கடின உழைப்பை குறிப்பிட்ட அவர், படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தபோதும், படப்பிடிப்பு தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காக ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்ததாக தெரிவித்தார். கடலில் மீண்டும் படகு, கேமரா மற்றும் லைட்டிங் அமைப்புகளைத் தயார்படுத்துவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால், மற்றவர்களின் சிரமத்தையும் கருத்தில் கொண்டு சூரி தொடர்ந்து பணியாற்றியதாக அவர் கூறினார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் மதிமாறனுடன் ‘உதயம் NH4’ காலத்திலிருந்தே நெருங்கிய நட்பு இருப்பதாக தெரிவித்தார். இரவு பகல் பாராமல் உழைக்கும் மதிமாறனின் கடின உழைப்பும் சினிமா மீதான பார்வையும் அவரை இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக விரைவில் உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு சவாலான விஷயத்தையும் துணிச்சலாகவும் பிரம்மாண்டமாகவும் கையாளக்கூடிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ‘மண்டாடி’ படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கியிருப்பதாக பாராட்டினார்.

சண்டை இயக்குநர் பீட்டர் ஹெய்ன், ‘மண்டாடி’யின் நடுக்கடல் படகு துரத்தல் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்‌ஷன் அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்தார். தனது 34 ஆண்டுகால சினிமா பயணத்தில் மிகவும் எக்ஸ்ட்ரீமான ஒரு சண்டைக் காட்சியை அமைக்க வேண்டும் என்ற இயக்குநர் மதிமாறனின் ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் கூறினார்.

சுமார் 20 கிலோமீட்டர் தூரம் நடுக்கடலில், எந்தவித நவீன மோட்டார் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தாமல், இயற்கையின் காற்றின் விசையை மட்டுமே நம்பி படகு துரத்தல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மோசமான வானிலை காரணமாக சில நாட்களில் ஒரு காட்சியைக்கூட படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், அத்தகைய கடினமான சூழலிலும் தயாரிப்பாளர்கள் முழுமையான ஆதரவு வழங்கியதாகவும் கூறினார்.

குறிப்பாக சூரியின் அர்ப்பணிப்பை பாராட்டிய பீட்டர் ஹெய்ன், ஒரு சண்டைக் காட்சியின்போது சூரிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், கரைக்குத் திரும்பாமல் சக்கர நாற்காலி உதவியுடன் படகிலேயே அமர்ந்து காட்சிகளை முடித்துக் கொடுத்ததாக தெரிவித்தார். சுஹாஸும் தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் ரவீந்திர விஜய், ‘மண்டாடி’ தனது முதல் நேரடி தமிழ்த் திரைப்படம் என்பதால் தனக்கு மிகவும் சிறப்பான படம் என்று தெரிவித்தார். தமிழ் சினிமாவின் வலுவான கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் மீது சிறுவயதிலிருந்தே தனக்கு ஈர்ப்பு இருந்ததாகவும், அப்படிப்பட்ட திரையுலகில் இத்தகைய சவாலான கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாவது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றும் கூறினார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் துணிச்சலையும் பாராட்டிய ரவீந்திர விஜய், படத்திற்காக அவர் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மேலும், சத்யராஜின் எளிமை, எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு, சுஹாஸின் நடிப்பு உள்ளிட்டவற்றையும் பாராட்டினார். நடுக்கடலில் படப்பிடிப்பின்போது தங்களை பாதுகாத்த தொண்டி பகுதியைச் சேர்ந்த படகு ஓட்டிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நடிகர் சுஹாஸ், ‘மண்டாடி’ தனது முதல் நேரடி தமிழ்த் திரைப்படம் என்பதால் மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். இயக்குநர் மதிமாறன் தன் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் படம் தனக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் பல அனுபவங்களை வழங்கியுள்ளதாக கூறினார்.

மேலும், படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்ன், மகேஷ் மேத்யூ, திலீப் சுப்பராயன் மற்றும் அசார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். நடுக்கடலில் படப்பிடிப்பின்போது உதவிய உள்ளூர் படகு ஓட்டிகளை தங்களது ‘லைஃப் கார்ட்ஸ்’ என்று குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, ‘மண்டாடி’ தனக்கு ஒரு மிகப்பெரிய பயணம் என்று குறிப்பிட்டார். தனது கனவை நம்பி அதை பிரம்மாண்டமாக உருவாக்க முழு சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நன்றி தெரிவித்தார். தனது சினிமா பயணத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்ததாகவும், அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களே ‘மண்டாடி’ போன்ற திரைப்படத்தை உருவாக்க உதவியதாகவும் தெரிவித்தார்.

கடல் சார்ந்த இந்தக் கதையை உருவாக்குவதற்காக ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளின் வாழ்க்கை முறையை அணுகிய விதம் குறித்தும் அவர் பேசினார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி ஒரு பாரம்பரிய விளையாட்டாக இருக்கிறதோ, அதேபோல் கடலோர மீனவ மக்களின் பாய்மரப் படகு பந்தயமும் முக்கியமான பாரம்பரிய விளையாட்டு எனக் குறிப்பிட்ட அவர், இதற்கும் அரசாங்க அளவில் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

இயக்குநர் வெற்றிமாறன், மதிமாறனின் சினிமா பார்வை மற்றும் உழைப்பைப் பாராட்டியதுடன், ‘மண்டாடி’ போன்ற பெரிய படைப்பை உருவாக்க எல்ரெட் குமார் போன்ற தயாரிப்பாளரின் ஆதரவு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார். கடலில் படப்பிடிப்பு நடத்துவது எவ்வளவு சவாலானது என்பதை நேரடியாக அறிந்திருப்பதாகக் கூறிய அவர், இயக்குநர், பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார்.

மேலும், 1999ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ திரைப்படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தனது பயணத்தைத் தொடங்கிய சூரி, 25 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பின் மூலம் இன்று கதாநாயகனாக உயர்ந்திருப்பது உண்மையான உத்வேகம் என்று வெற்றிமாறன் குறிப்பிட்டார். ‘மண்டாடி’ வெறும் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இல்லாமல், மனித உணர்வுகளைப் பேசும் படமாக இருக்கும் என்றும், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

நடிகர் சூரி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், இயக்குநர் மதிமாறனின் முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடலில் படமாக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒளிப்பதிவாளர் கதிர், படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், பால சரவணன், மிதுன், மகிமா, சுஹாஸ் உள்ளிட்ட படக்குழுவினரையும் பாராட்டினார்.

படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட கால் எலும்பு முறிவு குறித்தும் சூரி பகிர்ந்துகொண்டார். கால் வீங்கி நடக்க முடியாத நிலையிலும், படப்பிடிப்பை நிறுத்தாமல் வீல்சேர் உதவியுடன் படகில் சென்று தன்னால் முடிந்த காட்சிகளை தொடர்ந்து நடித்ததாக தெரிவித்தார். தன்னைப் பாதுகாத்த உள்ளூர் படகு ஓட்டிகள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆதரவும், குறிப்பாக தனது தாயின் அன்பும் தான் தொடர்ந்து உழைக்க மிகப்பெரிய காரணம் என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

பாரம்பரிய விளையாட்டு, கடலோர மக்களின் வாழ்க்கை, மனித உணர்வுகள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மண்டாடி’, இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் முதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. சூரியின் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் ‘மண்டாடி’ வெளியாகவுள்ளது.

Comments (0)
Add Comment