துல்கர் சல்மானின் ‘I Am Game’ பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா… செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், திரைப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் உருவாகியுள்ள மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்படம், அவரது 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் உருவான விதம், தங்களது கதாபாத்திரங்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“டிரெய்லரைத் தாண்டி இன்னும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கிறது!” – கதிர்

நிகழ்வில் பேசிய நடிகர் கதிர், ‘I Am Game’ பல சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட வித்தியாசமான படமாக இருக்கும் என தெரிவித்தார். டிரெய்லரில் ரசிகர்கள் பார்த்ததைத் தாண்டி படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், படத்தில் தான் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளதாகவும், இதற்கு முன்பு கிரிக்கெட் விளையாடிய அனுபவம் மிகவும் குறைவு என்றும் குறிப்பிட்டார். பள்ளிக் காலத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதோடு சரி என்றும், தன்னை கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் ஆச்சரியமாக இருந்ததாகவும் நகைச்சுவையாகக் கூறினார். இந்தப் படத்திற்காக கிரிக்கெட்டை புதிதாகக் கற்றுக்கொண்டு நடித்ததாகவும் தெரிவித்தார்.

படத்தின் பின்னணியில் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருப்பதாகக் குறிப்பிட்ட கதிர், வித்தியாசமான கதைகள் மற்றும் புதிய முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார்.

“கதையை கேட்டவுடனே நடிக்க முடிவு செய்தேன்!” – சம்யுக்தா விஸ்வநாதன்

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக ‘I Am Game’ படத்தின் கதையை கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என முடிவு செய்ததாக தெரிவித்தார்.

தனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், மனதைத் தொட்டதாகவும் இருந்ததாகக் கூறிய அவர், குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட படப்பிடிப்பு தன்னைப் பொறுத்தவரை ஒரு சிறந்த பயிற்சி அனுபவமாக அமைந்ததாக தெரிவித்தார்.

ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது தனது நடிப்பில் நிறைய கற்றுக்கொள்ள உதவியதாகவும் கூறினார். துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டார்.

படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும், படப்பிடிப்பு முடிவில் அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டதாகவும், டிரெய்லரில் ரசிகர்கள் பார்த்ததைவிட முழுப் படத்தில் பல கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை உணர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“துல்கர் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல… மிகச்சிறந்த மனிதர்!” – ஆண்டனி வர்கீஸ்

நடிகர் ஆண்டனி வர்கீஸ், சென்னையில் நடைபெறும் தனது முதல் நிகழ்ச்சி இது என்றும், ‘I Am Game’ படத்தின் தமிழ் விளம்பர நிகழ்வுக்காக சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

துல்கர் சல்மானை மிகச்சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நடிகர் மற்றும் நெருங்கிய நண்பர் எனக் குறிப்பிட்ட ஆண்டனி வர்கீஸ், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகக் கூறினார்.

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் தனது நெருங்கிய நண்பர் என்றும், அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் தெரிவித்தார். தனது கதாபாத்திரம் குறித்து தற்போது அதிகம் வெளிப்படுத்த முடியாது என்றும், படம் வெளியாகும்போது அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்றும் கூறினார்.

“I Am Game கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை தரும்!” – துல்கர் சல்மான்

நிகழ்வில் பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான், சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாக சந்தித்து தனது படங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருப்பதாக தெரிவித்தார்.

‘I Am Game’ திரைப்படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வு ஏற்படும் எனக் கூறிய அவர், இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்திருப்பதை குறிப்பிட்டார்.

மேலும், தனது தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films இதுவரை உருவாக்கிய திரைப்படங்களில் அதிக பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பைக் கொண்ட படமாக ‘I Am Game’ உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

படத்தில் கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளதாக பாராட்டிய துல்கர் சல்மான், அவர் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு தேவையான நம்பகத்தன்மையை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.

நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், இப்படத்தின் முக்கியமான அங்கம் எனக் குறிப்பிட்ட துல்கர், அவரது எனர்ஜி மற்றும் உற்சாகம் இன்றைய இளம் தலைமுறையினரிடையே கூட அரிதாக பார்க்கக்கூடியது என பாராட்டினார்.

சம்யுக்தா விஸ்வநாதனுக்கு ‘I Am Game’ ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்றும், ஆண்டனி வர்கீஸ் பெப்பே படத்தின் முக்கியமான பலமாக இருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ஆண்டனி வர்கீஸின் பங்களிப்பை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், ஜேக்ஸ் பிஜாய் இசையில் இப்படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும் எனத் தெரிவித்த துல்கர், ஏற்கனவே வெளியான பாடல்களைத் தாண்டி படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

காமெடி முதல் ஆக்ஷன் வரை… முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர்!

‘I Am Game’ திரைப்படம் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்தார். காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கேமிங் என பல்வேறு அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சாமன் சாக்கோ எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். அஜயன் சாலிசேரி தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். VFX பணிகளை தௌஃபீக் (Eggwhite) மேற்கொண்டுள்ளார்.

Zee Music நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை கைப்பற்றியுள்ளது.

ஐந்து மொழிகளில் பான்-இந்தியா வெளியீடு

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ‘I Am Game’ வெளியாகிறது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக உருவாகியுள்ள ‘I Am Game’, துல்கர் சல்மானை ஸ்டைலிஷான மாஸ் அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. பல்வேறு ஜானர்களை ஒருங்கிணைத்த கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment