பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது முதல் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன்இயக்கும் இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகிறது. முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட கதையாக உருவாகும் இப்படம், திகில், மர்மம் மற்றும் வலுவான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள மூன்று முன்னணி நடிகைகள் இந்தப் படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளனர். த்ரிஷா கிருஷ்ணன், ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்.
பல தசாப்தங்களாக தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள ராதிகா சரத்குமார், ‘கிழக்கு சீமையிலே’, ‘பசும்பொன்’, ‘தங்க மகன்’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், ‘சூரரைப் போற்று’, ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ள அபர்ணா பாலமுரளி, இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முதல் தமிழ் படம்… முதல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்!
‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ராஜா கிருஷ்ண மேனன், வலுவான மனித உணர்வுகளையும் சுவாரஸ்யமான உலகங்களையும் மையமாகக் கொண்ட கதைகளை கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர்.
தற்போது முதன்முறையாக உளவியல் திகில் ஜானரில் களமிறங்கும் அவர், அதே நேரத்தில் தனது முதல் தமிழ் திரைப்படத்தையும் இயக்குகிறார். மேலும், முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட கதையை இயக்குவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் கூறுகையில், இது தனது திரைப்பயணத்தில் பல்வேறு முதல் அனுபவங்களை வழங்கும் திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார். த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி போன்ற திறமையான நடிகைகளுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருப்பதாகவும், திறமையான தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் குமார் மங்கத் பதக் ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், லோகோமோட்டிவ் குளோபலின் விகாஸ் மற்றும் சுந்தர் ஆகியோர் கதையில் எந்தவித சமரசமும் இல்லாமல் அதை உருவாக்க முழு ஆதரவு அளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
“புதிய சினிமா அனுபவத்தை வழங்கும்!” – குமார் மங்கத் பதக்
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் குமார் மங்கத் பதக், தமிழ் சினிமா எப்போதுமே துணிச்சலான, தனித்துவமான மற்றும் கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளைச் சொல்லும் களமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது முதல் தமிழ் தயாரிப்பும் அதே உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என விரும்பியதாக தெரிவித்த அவர், சுவாரஸ்யமான உலகத்தைக் கொண்ட வித்தியாசமான கதையாக இப்படம் உருவாகி வருவதாகவும், இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் சிறப்பான முறையில் கதையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
த்ரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இப்படம் பார்வையாளர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
லண்டனில் உருவாகும் தமிழ் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்
லோகோமோட்டிவ் குளோபலின் மேனேஜிங் பார்ட்னரும் தயாரிப்பாளருமான சுந்தர் ஆரோன் மற்றும் தயாரிப்பாளர் விகாஸ் ஷர்மா ஆகியோர், எல்லைகளைக் கடந்து பயணிக்கும் அதே நேரத்தில் மனித உணர்வுகளை வலுவாகப் பேசும் கதைகளையே தங்களது நிறுவனம் தேர்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
திகில், மர்மம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட இந்த தமிழ் மொழி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதை தங்களை உடனடியாக கவர்ந்ததாகவும், த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
லண்டனில் படமாக்கப்படும் இப்படம், தாங்கள் உருவாக்கி வரும் தரமான திகில் திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானதாக அமையும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பனோரமா ஸ்டுடியோஸின் புதிய அத்தியாயம்
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் தென்னிந்திய திரையுலகில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக மலையாளத் திரையுலகில் தயாரிப்பு, விநியோகம் மற்றும் பல்வேறு முக்கிய கூட்டணிகள் மூலம் தனது இருப்பை வலுப்படுத்தி வரும் இந்நிறுவனத்தின் மலையாளத் திரைப்படங்கள் பட்டியலில் ‘அனோமி’, ‘உன்மதம்’ மற்றும் ‘டிக்கி டாக்கா’ உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ‘புரொடக்ஷன் நம்பர் 4’ மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘முன்பே’ ஆகிய படங்களின் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் பல்வேறு கூட்டணிகளையும் பனோரமா ஸ்டுடியோஸ் அமைத்துள்ளது.
இந்நிலையில், தனது முதல் தமிழ் திரைப்படத் தயாரிப்பு மூலம் தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை பதிக்கிறது பனோரமா ஸ்டுடியோஸ்.
பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், ஃபியூஷன் பிலிக்ஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் புரொடக்ஷன்சார்பில் உருவாகிறது. குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியாஆகியோர் தயாரிக்கின்றனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
சுவாரஸ்யமான கதைக்களம், மூன்று முன்னணி நடிகைகளின் கூட்டணி மற்றும் ராஜா கிருஷ்ண மேனனின் தனித்துவமான கதை சொல்லல் ஆகியவற்றுடன் உருவாகி வரும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள், தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.