பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள பிரபல வீடியோ கேம் திரைப்படமான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தின் முதல் டிரெய்லர் ஜப்பானில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் 16, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய படக்குழு, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தின் முதல் டிரெய்லரை வெளியிட்டது. இந்த நிகழ்வில் படத்தின் முக்கிய நடிகர்களான நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங், ஜேசன் மோமோவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஜப்பானைச் சேர்ந்த நடிகர் ஹிரூகி கோட்டோ, ஜப்பானிய குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேம் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
டிரெய்லரை பார்த்துக்கொண்டே விளையாடலாம்!
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் புதிய முயற்சியாக, முழுநீளமாக விளையாடக்கூடிய இன்டராக்டிவ் டிரெய்லர் ஒன்றையும் யூடியூபில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் ரசிகர்கள் டிரெய்லரை வெறுமனே பார்ப்பதோடு நிறுத்தாமல், அதில் நேரடியாக விளையாடவும் முடியும். டிரெய்லரைப் பார்த்துக்கொண்டே விளையாடும் இந்த புதிய அனுபவம், ரசிகர்களை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ உலகிற்குள் நேரடியாக அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரியூ – கென் மோதல்!
1993-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டுள்ள இப்படத்தின் கதையில், ஒருவரையொருவர் பிரிந்து வாழும் ரியூமற்றும் கென் மாஸ்டர்ஸ் மீண்டும் சண்டைக் களத்திற்குத் திரும்புகின்றனர்.
மர்மமான சுன்-லி, அடுத்த ‘வேர்ல்ட் வாரியர்’ போட்டியில் பங்கேற்க இருவரையும் அழைக்கிறார். இதையடுத்து ஆக்ரோஷமான சண்டைகள், போட்டி, கோபம் மற்றும் பழைய கணக்குகள் என களம் சூடுபிடிக்கிறது.
ஆனால், இந்த பிரம்மாண்டமான போட்டிக்குப் பின்னால் ஆபத்தான சதித்திட்டம் ஒன்று இருப்பது தெரியவருகிறது. இதனால் ரியூ மற்றும் கென் இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொள்வதுடன், தங்களது கடந்த காலத்தில் புதைந்திருக்கும் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.
வீடியோ கேமிலிருந்து பிரம்மாண்ட திரைக்கு!
இயக்குநர் கிட்டாவ் சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’, உலகப் புகழ்பெற்ற ஆர்கேட் கேம் தொடரை பெரிய திரைக்கு கொண்டு வருகிறது. ரசிகர்களின் விருப்பமான கதாபாத்திரங்களுடன், ஹடோகென், ரவுண்ட்ஹவுஸ் கிக்உள்ளிட்ட பிரபலமான சண்டை அசைவுகளும் இடம்பெறும் ஆக்ஷன் விருந்தாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் நோவா சென்டினியோ – கென் மாஸ்டர்ஸ், ஆண்ட்ரூ கோஜி – ரியூ, கலினா லியாங் – சுன்-லி, ஜோ ‘ரோமன் ரெயின்ஸ்’ அனோவாய் – அகுமா, டேவிட் டாஸ்ட்மால்சியன் – எம். பைசன், கோடி ரோட்ஸ் – குயிலே, ஆண்ட்ரூ ஷுல்ஸ் – டான் ஹிபிகி, எரிக் ஆண்ட்ரே – டான் சாவேஜ், வித்யுத் ஜம்வால் – தல்சிம், ஆர்வில் பெக் – வேகா, ஆலிவர் ரிக்டர்ஸ் – சாங்கிஃப், ஹிரூகி கோட்டோ – இ. ஹோண்டா, ரெய்னா வல்லண்டிங்ஹாம் – ஜூலி, அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி – ஜோ, கர்டிஸ் ‘50 சென்ட்’ ஜாக்சன் – பால்ராக் மற்றும் ஜேசன் மோமோவா – பிளாங்காஆகியோர் நடித்துள்ளனர்.
வீடியோ கேம் ரசிகர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கதாபாத்திரங்கள் முதன்முறையாக பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்பட உலகில் ஒன்றாக களமிறங்குவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் 16, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.