தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள இப்படம், வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் திரைப்பட இசையில் தொடர்ந்து பிஸியாக இயங்கி வருவதுடன், தனது சொந்த இசை நிறுவனத்தின் வாயிலாக புதிய மற்றும் திறமையான இசைப் படைப்புகளையும் ஊக்குவித்து வருகிறார். குறிப்பாக, சக இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் திரைப்படங்களின் ஆடியோ உரிமைகளைப் பெற்று, அந்த இசையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் பெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியுள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன்முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘கடலாடும்’ ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இசைத் தளத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. அந்தோணி தாசன் குரலில், உணர்வுப்பூர்வமான வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடல், ‘என்ன விலை’ திரைப்படத்தின் உலகத்தையும் அதன் உணர்வுகளையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் ‘என்ன விலை’, ஜெர்மனியில் நடைபெற்ற மேன்ஹெய்ம் ஆர்ட் அண்ட் ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வென்றுள்ளது.
மேலும், இஸ்தான்புல்லில் நடைபெற்ற கயா சர்வதேச திரைப்பட விழா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அட்லாண்டா இந்திய திரைப்பட விழா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பாகவே ‘என்ன விலை’ சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படம் நடிகர் கருணாஸின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தில் வெளியாகும் முக்கியமான திரைப்படமாகவும் அமைந்துள்ளது. அதேபோல், தனது இயல்பான மற்றும் அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நிமிஷா சஜயன்முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன்ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் கிடைத்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து, ‘என்ன விலை’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, ‘என்ன விலை’ படத்தின் சிறப்புத் திரையிடல்களைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், படத்தின் அழுத்தமான கதை சொல்லல் மற்றும் தாக்கமிக்க திரை அனுபவத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் ஆடியோ உரிமையை கைப்பற்றியிருப்பது படத்தின் இசைப் பயணத்திலும் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் இசை தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.