தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியுள்ளது.
மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு, அழுத்தமான மற்றும் தாக்கமிக்க கதைக்களத்துடன் ‘மாகாளி’ உருவாகி வருகிறது. மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் சமூகத்தின் மறைக்கப்பட்ட யதார்த்தங்களை மையப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முதல் இரண்டு போஸ்டர்களும் ‘மாகாளி’ திரைப்படத்தின் பின்னணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. முதல் போஸ்டரில், பிரம்மாண்டமான விலங்கின் எலும்புக்கூட்டுக்குள் அமீர் தனிமையில் நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இரண்டாவது போஸ்டரில், எங்கும் சிதறிக் கிடக்கும் விலங்குகளின் எலும்புக்கூடுகளுக்கு நடுவே ‘மாகாளி’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது.
வெறுமை, அழிவு, இயற்கையின் வலி மற்றும் சமூகத்தின் மறைக்கப்பட்ட யதார்த்தம் போன்ற பல்வேறு அடுக்குகளை உணர்த்தும் வகையில் இந்த போஸ்டர்களின் காட்சியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் அமீருடன் சுவாசிகா, அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதிஉள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பை மேற்கொள்ள, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் கவனிக்கின்றனர். வர்ஷினி சங்கர் ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பிலும், கபிலன் விளம்பர வடிவமைப்பிலும், ஜெய்குமார் வைரவன்நிழற்படத்திலும், நாகேந்திரன் ஒப்பனையிலும் பணியாற்றுகின்றனர். வெங்கட் ஆறுமுகம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், சதிஷ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர்.
சமூகத்தின் ஆழமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மாகாளி’, மாரி செல்வராஜின் தயாரிப்பு மற்றும் எஸ்.பி. அரவிந்தின் இயக்கத்தில் உருவாகும் படைப்பு என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகரித்துள்ளது.
‘மாகாளி’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.