கமல்ஹாசன் – எஸ்.யு. அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு… வைரலாகும் ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள்!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் முதல் முறையாக இணையும் புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, கமல்ஹாசனின் புதிய தோற்றம் இடம்பெற்றுள்ள ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.

கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான லுக் டெஸ்ட் நேற்று நடைபெற்றுள்ளது. அதிலிருந்து வெளியான சில காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், கமல்ஹாசனின் புதிய தோற்றம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தோற்றங்களையும் ஏற்று நடிப்பதன் மூலம் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் கமல்ஹாசனின் இந்த புதிய லுக், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், படத்தின் முக்கியமான கதை விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், கமல்ஹாசனின் தோற்றத்தை வைத்து ரசிகர்கள் பல்வேறு யூகங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் கமல்ஹாசன் – இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் கூட்டணியின் முதல் படமாகும். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சித்தா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனித்துவமான இயக்குநர் முத்திரையைப் பதித்துள்ள எஸ்.யு. அருண் குமார், தற்போது கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ள இந்தப் படத்தின் மூலம் புதிய களத்தை கையாள உள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியாநிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

படப்பிடிப்புக்கு முன்பாக லுக் டெஸ்ட் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதைக்களம், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் புதிய தோற்றம் குறித்த ஆர்வத்துடன், ‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் – உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் முதல் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Comments (0)
Add Comment