கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹஸ்ஸாப், திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இளவயது உரையாளர், இளவயது சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் காலநிலை நடவடிக்கை செயற்பாட்டாளர் என்ற சிறப்புகளைப் பெற்றுள்ள ரூஹி, மரங்களைப் பாதுகாத்தல், காகிதத்தைச் சேமித்தல், மறுசுழற்சி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ரூஹியை அன்புடன் வரவேற்ற குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அவரது சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் காகிதங்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ரூஹி உருவாக்கியுள்ள ‘ரூஹியின் பேப்பர் பேங்க்’ குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
சந்திப்பின்போது, “காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!!” என்ற தனது செய்தியை ரூஹி குடியரசுத் துணைத் தலைவரிடம் பகிர்ந்துகொண்டார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட காலநிலை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
ரூஹியின் முயற்சிகளைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருக்கு சாக்லேட்டுகளை வழங்கியதுடன், “மனிதகுலத்தின் மீதான உங்களது அக்கறை அசாதாரணமானது. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! எப்போதும் நல்ல சிந்தனையுடன் தொடர்ந்து செயல்படுங்கள்” என கையெழுத்துடன் பாராட்டு செய்தியையும் வழங்கினார்.
ரூஹி வழங்கிய மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்பட்ட குறிப்பேட்டிலும் குடியரசுத் துணைத் தலைவர் கையெழுத்திட்டார். மேலும், ரூஹி வழங்கிய செடி தொட்டியையும், நேபாள மக்கள் மீதான தனது அக்கறை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவர் வரைந்த ஓவியத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், மரங்கள் மற்றும் சமூகங்கள் பாதிக்கப்பட்டது ரூஹியை ஆழமாகப் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதுடன், மரங்களை நடுதல் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் பங்கேற்க வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக உள்ளது.
தற்போது ரூஹியின் சுற்றுச்சூழல் பார்வை மரங்களைப் பாதுகாப்பதைத் தாண்டி, குழந்தைகள் முன்னெடுக்கும் காலநிலை நடவடிக்கை, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை உள்ளடக்கிய இயக்கமாக விரிவடைந்து வருகிறது. காடுகள், நீர், பல்லுயிர் வளம், பொறுப்பான நுகர்வு மற்றும் பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
தி சில்ட்ரன் மூவ்மெண்ட் பார் கிளைமேட் கம்பேசன் பவுண்டேஷன் மூலம் ட்ரீ பேங்க் நர்சரிஸ், ரூஹியின் பேப்பர் பேங்க் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை உருவாக்க ரூஹி திட்டமிட்டுள்ளார். நீண்டகாலமாக, உலகின் 195 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக ஒன்றிணைப்பதே அவரது கனவாக உள்ளது.
“நான் ஒரு குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் தாய் பூமியைப் பாதுகாக்க உதவ முடியும்” என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் ரூஹி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை தலைமுறைகளையும் நாடுகளின் எல்லைகளையும் கடந்து அக்கறை, ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கான பாதையாக மாற்ற விரும்புகிறார்.
“காகிதத்தைச் சேமிப்பதும், மரங்களைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு குடிமகனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பாக மாற வேண்டும் என்பதே எனது கனவு” என ரூஹி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவருடனான இந்தச் சந்திப்பு, தனது சுற்றுச்சூழல் செய்தியை இன்னும் அதிகமான குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கான ரூஹியின் முயற்சிக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது.