தமிழ்நாட்டின் காடுகள், மலைகள், கடற்கரைகள் மற்றும் அரிய வனவிலங்குகளை இதுவரை பார்த்திராத கோணத்தில் பதிவு செய்துள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) வனவிலங்கு ஆவணப்படம், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பிவிஆர் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், அதன் பல்லுயிர் பன்முகத்தன்மையையும் திரையரங்க அனுபவமாக வழங்கும் வகையில் உருவாகியுள்ள இந்த ஒரு மணி நேர ஆவணப்படம், மாநிலத்தின் பல்வேறு நிலப்பரப்புகளில் நான்கு ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த முன்னெடுப்பாகவும், Nature inFocus நிறுவனத்துடன் இணைந்தும், தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவுடனும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐந்திணை நிலப்பரப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘வைல்ட் தமிழ்நாடு’ உருவாக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகள், காடுகள், விளைநிலங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகள் என தமிழ்நாட்டின் மாறுபட்ட இயற்கைச் சூழல்களை இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.
யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பார்வையாளர்களுக்கு பரிச்சயமான வனவிலங்குகளுடன், செங்குரங்கு (Lion-tailed macaque), மின்மினிப் பூச்சிகள், மெட்ராஸ் முள்ளெலி (Madras hedgehog) உள்ளிட்ட அரிதாகக் காணக்கூடிய உயிரினங்களின் வாழ்க்கையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். நான்கு ஆண்டுகளாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் குழு பல்வேறு இயற்கைச் சூழல்களில் களத்தில் தங்கி, இந்த ஆவணப்படத்திற்கான காட்சிகளை பதிவு செய்துள்ளது.
படத்தின் பின்னணிக் குரலை நடிகர் அரவிந்த் சுவாமி வழங்கியுள்ளார். மூன்று முறை கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளின் கலவையில் இப்படத்திற்கான இசையை உருவாக்கியுள்ளார்.
படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆரத்தி கிருஷ்ணா பேசுகையில், தமிழ்நாட்டின் இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் தங்கள் நிறுவனம் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் வனப்பகுதிகளின் எழிலையும், பல்வேறு நிலப்பகுதிகளில் காணப்படும் பல்லுயிர் சூழலையும் ‘வைல்ட் தமிழ்நாடு’ நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிவிஆர் திரையரங்குகள் வாயிலாக ஆவணப்படத்தை அதிகமான மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம், இயற்கை உலகின் மீது ஆழமான அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடம் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காடுகள், மலைகள், கடற்கரைகள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்ட களப்பணியின் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, தமிழகத்தின் இயற்கை பாரம்பரியத்தை ஒரு சினிமா அனுபவமாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்துள்ளது.
செப்டம்பர் 7 முதல் பிவிஆர் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாகும் ‘வைல்ட் தமிழ்நாடு’, தமிழ்நாட்டின் இயற்கை உலகையும் அரிய வனவிலங்குகளையும் பிரம்மாண்டமான வெள்ளித்திரையில் நேரடியாகக் காணும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.