புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2: த மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் அர்ஜுன் சக்கரவர்த்தி. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இன்வெஸ்டிகேட்டிவ் கிரைம் திரில்லர் தொடரான இதில், சுந்தரேசன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், தனது அறிமுகம், நடிப்புப் பயணம் மற்றும் ‘வதந்தி சீசன் 2’ அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
சிறு வயதிலிருந்தே சினிமா மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாகக் கூறும் அர்ஜுன் சக்கரவர்த்தி, தனது தந்தை பணியாற்றிய திரைப்படங்களின் படப்பிடிப்புத் தளங்களுக்கு விடுமுறை நாட்களில் சென்று வந்த அனுபவமே திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
“திரையில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், படப்பிடிப்புத் தளத்தில் அதன் பின்னால் நடக்கும் பணிகளைப் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை சிறு வயதிலேயே உணர்ந்தேன். கேமராமேன், லைட்மேன், புரொடக்ஷன் என ஒவ்வொருவரும் கடுமையாக உழைப்பதைப் பார்த்தபோது, நானும் இந்தத் துறையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது” என அவர் கூறியுள்ளார்.
தற்போது சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வரும் அர்ஜுன், படிப்புடன் இணைந்தே தனது நடிப்பு கனவையும் தொடர்ந்து வளர்த்து வருகிறார். பல நிறுவனங்களில் ஆடிஷன்களில் பங்கேற்றதுடன், கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி, சினிமா சண்டைப் பயிற்சி இயக்குநர் டேஞ்சர் மணியிடம் ஆக்ஷன் பயிற்சி, மைம், நடனம் மற்றும் பல்வேறு நடிப்பு தொடர்பான ஒர்க்ஷாப்களிலும் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தனது தோற்றம் மற்றும் நிறம் காரணமாக ஆரம்ப காலங்களில் பலரிடமிருந்து கேலியும் விமர்சனங்களும் வந்ததாகவும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். “கருப்பாக இருக்கிறாய், உன் முகம் கேமராவில் தெரியுமா என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் அதுவே என்னால் ஏன் நடிகனாக முடியாது என்ற வெறித்தனமான எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது. நடிகனாகத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
‘நல்ல நடிகர்’ என்ற அடையாளம்தான் ஆசை
ஆக்ஷன் ஹீரோ என்ற குறிப்பிட்ட அடையாளத்தை விட, எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருந்தி நடிக்கக்கூடிய ஒரு நல்ல நடிகராக அறியப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என அர்ஜுன் கூறியுள்ளார்.
“பசுபதி சார் போன்ற நடிகர்கள் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தங்களை முழுமையாக பொருத்திக்கொள்வார்கள். அதுபோல் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான் என் ஆசை. எந்தவிதமான கேரக்டர் என்ற வரையறையும் இல்லாமல், கிடைக்கும் வாய்ப்புகளில் எனது சிறந்த நடிப்பை வழங்க வேண்டும். அதற்காக எவ்வளவு கடினமாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
‘வதந்தி சீசன் 2’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறும் அர்ஜுன் சக்கரவர்த்தி, புஷ்கர் – காயத்ரி தன்னைப் பார்த்த பிறகு ஆடிஷனுக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
முதலில் புஷ்கர் – காயத்ரி நடத்திய ஆடிஷனில் தேர்வான அவர், பின்னர் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸின் ஆடிஷனிலும் பங்கேற்றுள்ளார். ‘வதந்தி’ முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு உருவாகும் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பை எக்காரணம் கொண்டும் தவறவிட விரும்பவில்லை என்ற தனது ஆர்வமே அந்த வாய்ப்பை நோக்கி தன்னை அழைத்துச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அந்த ஆடிஷனுக்குப் பிறகு, சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “இந்தத் தொடர் எனக்கான ஒரு அடையாளத்தை அளித்துள்ளது. சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
தலைகீழாகத் தொங்கிய காட்சி… மறக்க முடியாத அனுபவம்!
‘வதந்தி சீசன் 2’ படப்பிடிப்பில் தனக்கு மிகவும் சவாலான அனுபவமாக அமைந்த ஒரு காட்சியைப் பற்றியும் அர்ஜுன் பகிர்ந்துள்ளார். ஒரு காட்சியில் சுந்தரேசன் கதாபாத்திரம் தலைகீழாகக் கட்டப்பட்டு தொங்கும் காட்சியில் நடித்ததாகவும், அந்தக் காட்சிக்காக காலை முதலே உணவு எடுத்துக்கொள்ளாமல் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலை எட்டு மணிக்கு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த அவருக்கு, இரவு எட்டு மணியளவில்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விடியற்காலை வரை படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், காட்சிக்குப் பிறகு உடல் வலி காரணமாக எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பின்னர் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
“அது உடல்ரீதியாக மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது. ஆனால் அந்த வலியையும் ஒரு நடிகனாக கிடைத்த அனுபவமாகவே ரசித்தேன். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்த பிறகு படக்குழுவினர் அனைவரும் கைத்தட்டி பாராட்டியது எனக்கு மறக்க முடியாத தருணம்” என அவர் கூறியுள்ளார்.
விஜய் ரசிகரான அர்ஜுன்!
தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும், அவரை தனது முக்கியமான இன்ஸ்பிரேஷன்களில் ஒருவராகப் பார்க்கிறேன் என்றும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
“நான் பக்கா விஜய் ரசிகன். விஜய் சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். ‘வதந்தி சீசன் 2’-ஐ அவர் பார்த்தால் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பும் பதட்டமும் எனக்கு இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.
அதேபோல் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரிடமிருந்தும் தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானதில் கவலை இல்லை
சினிமாவில் அறிமுகமாகாமல் இணையத் தொடர் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியதில் எந்த வருத்தமும் இல்லை எனவும் அர்ஜுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
“இந்த ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் திறமைசாலிகள் பலர் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே வாய்ப்பு சினிமாவிலா, வெப் சீரிஸிலா என்பது முக்கியமில்லை. எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நூறு சதவீத உழைப்பைக் கொடுத்து என் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம்” என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அதேநேரத்தில் நடிகராக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் திரைத்துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் பணியாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
“என் முதல் ரசிகர் யாராக இருந்தாலும் மகிழ்ச்சிதான்”
‘வதந்தி சீசன் 2’-ஐ பார்த்து சுந்தரேசன் கதாபாத்திரத்தை ரசித்து தனது முதல் ரசிகராக யார் உருவானாலும் அது தனக்கு மகிழ்ச்சிதான் என அர்ஜுன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
“மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். அதனால், என்னுடைய நடிப்பை பார்த்து ஒருவர் என்னை ரசித்து ரசிகராக ஏற்றுக்கொண்டால் அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை” என அவர் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் தொடர்பு
இதுவரை தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்த அர்ஜுன், ‘வதந்தி சீசன் 2’ வெளியான பிறகு தனது arjun_chakkaravarthy கணக்கை பொதுப் பயன்பாட்டிற்கு மாற்றியுள்ளார். ரசிகர்கள் தனது நடிப்பைப் பாராட்டி வெளியிடும் பதிவுகளை லைக் மற்றும் ஷேர் செய்து வருவதாகவும், இனிமேல் தனது திரைப்படங்கள், நடிப்புப் பயணம் மற்றும் எண்ணங்கள் தொடர்பான பதிவுகளைப் பகிரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘வதந்தி சீசன் 2’ தனக்கு நடிகராக ஒரு புதிய அடையாளத்தை வழங்கியுள்ளதாகக் கூறும் அர்ஜுன் சக்கரவர்த்தி, இனி கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தனது முழு உழைப்பையும் வழங்கி, மக்கள் மனதிலும் திரைத்துறையிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
“எத்தனை தோல்விகள் வந்தாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடக்கூடாது. கடுமையான முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் என் பயணம் என்னை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லும்” என்ற நம்பிக்கையுடன் தனது அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார் நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.