இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
தனது திரைப்படங்களின் வாயிலாக மண்ணோடு நெருக்கமான வாழ்வியலையும், தனது அனுபவங்களையும் இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ படத்திலும் மண் சார்ந்த கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். இப்படம் அவரது வாழ்க்கையையும் தழுவியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
‘மஞ்சணத்தி’ படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ‘வாழை’ படப்புகழ் ராகுல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ராகவி நடிகையாக அறிமுகமாகிறார்.
படப்பிடிப்பு தொடக்க விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக, படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்றி, கிளாப் போர்டு அடித்து படத்தின் முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார்.
“இளையராஜா சார் பணியாற்றுவது என் வாழ்நாள் சாதனை” – மாரி செல்வராஜ்
‘மஞ்சணத்தி’ குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “என்னுடைய திரைப்படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகவும், கோலாகலமாகவும் பூஜையுடன் தொடங்கியதில்லை. ஆனால் இந்தப் படத்தை அப்படித்தான் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் இளையராஜா சார் இருப்பது என்னுடைய வாழ்நாள் சாதனை. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காலங்கள் உண்டு. இன்று அவர் என்னுடைய திரைப்படத்திற்கு பணியாற்றுகிறார் என்பது என் வாழ்நாளில் நான் சாதித்த மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்” என்றார்.
மேலும், தனது மனைவி திவ்யா செல்வராஜுக்கும் இளையராஜாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்ததாகக் கூறிய மாரி செல்வராஜ், “அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் இளையராஜா பணியாற்றுவது எங்களால் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இளையராஜா தன்னை அழைத்த தருணத்தை நினைவுகூர்ந்த அவர், “நான் என் உழைப்பு, வாசிப்பு, அரசியல் என அனைத்திலும் கர்வமாக இருந்திருக்கிறேன். ஆனால், எனக்காக அதிகாலையிலேயே எழுந்து இசையமைத்து, ‘உனக்காகத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன், வா’ என்று இளையராஜா சார் அழைத்த அந்த நிமிடத்தில், நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்” என்றார்.
தொடர்ந்து, “பல தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து பணியாற்றி வரும் அவரது உழைப்பும், எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தக்கூடிய எங்கள் ராஜாவின் கர்வமும், திமிரும் என்றுமே அழகானது, உயர்வானது, மகத்துவமானது”என்றும் அவர் குறிப்பிட்டார்.
படத்தின் கதையை எழுதும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட மாரி செல்வராஜ், “இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக இருக்கும். திரைக்கதை எழுதும்போது நடிகர்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள் என பல விஷயங்களை யோசிப்பேன். ஆனால் இந்தப் படத்தை எழுதும்போது, ‘இந்த இடத்தில் ராஜா சார் எப்படி இசையமைப்பார்?’ என்றுதான் அதிகம் யோசித்தேன். இந்தப் படம் திரைக்கு வரும் நாள் என் வாழ்நாளின் முக்கியமான நாளாக இருக்கும்” என்றார்.
கதிர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாகக் கூறிய அவர், “நான் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பதற்கும் கதிர் ஒரு முக்கிய காரணம். கதையை கூறுவதற்கு முன்பே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்ட நடிகர்களுக்கும் படத்தில் சிறப்பான பங்கு உள்ளது. படம் பார்க்கும்போது அது அனைவருக்கும் தெரியும். இந்தத் திரைப்படம் என் வாழ்க்கைக் கதையையும் தழுவியதாக இருக்கும். அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
“நானும் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான்” – இளையராஜா
படம் குறித்து இசைஞானி இளையராஜா பேசுகையில், “நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் இப்படியே கொஞ்சம் தூரம் சென்றால் என்னுடைய வீடு வந்துவிடும். நானும் இங்குதான் பிறந்தவன். காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்” என்றார்.
தனது இசைப் பயணம் குறித்து பேசிய இளையராஜா, “உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என்று கூறினார்.
மேலும், தனது இசையின் தனித்தன்மை குறித்து குறிப்பிட்ட அவர், “எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்” என்றார்.
தனது இசையுடன் தொடர்புடையதாக கூறிய ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துகொண்ட இளையராஜா, ஜெர்மனியில் வசித்த தமிழ் தம்பதியரின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தையின் அசைவுகள் நின்றபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த நேரத்தில் தனது இசையை கேட்கச் செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர் குழந்தையின் உயிர் இருப்பது தெரியவந்ததாகக் கூறிய அவர், “அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. நான் இசையமைப்பது என் வேலை. கடவுள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறார்; நான் அதைச் செய்கிறேன்”என்று குறிப்பிட்டார்.
மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசிய அவர், “அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன். அவர் என் இசையை கொண்டாடக்கூடிய ஒருவர். இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். இதில் பங்குபெற்ற அனைவரும் நல்ல பெயரும் புகழும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
வலுவான தொழில்நுட்பக் குழு
‘மஞ்சணத்தி’ படத்திற்கு எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராகவும், சாண்டி நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார்.
சுரேன்.G மற்றும் அழகியகூத்தன்.S ஆகியோர் ஒலி வடிவமைப்பையும், ரஞ்சித் அம்பாடி மேக்கப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். VFX பணிகளை ஹரிஹரசுதன் R கவனிக்கிறார். பப்ளிசிட்டி டிசைனை கபிலன் மேற்கொள்ள, நிர்வாகத் தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகம் பணியாற்றுகிறார்.
திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் மற்றும் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷ் லால்வானி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்ச்சூன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.