இன்பராஜ் IPS ஆக மாஸ் காட்டும் சூர்யா – ‘SCENE’ டைட்டில் டீசர் வெளியானது!

சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 47’ திரைப்படத்திற்கு ‘சீன் – SCENE’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், ‘சீன் – SCENE’ திரைப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காமெடியுடன் ஆக்‌ஷன் கலந்த என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்திற்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஷின் ஷியாம் இசையமைக்க, அஜ்மல் ஷபு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அஸ்வினி காலே கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘சீன் – SCENE’ என்ற தலைப்புடன் வெளியான டைட்டில் டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இதில் சூர்யா ஏற்றுள்ள ‘இன்பராஜ் IPS’ கதாபாத்திரத்தின் தோற்றம், அவரது திரை ஆளுமை, மாஸான வசன உச்சரிப்பு மற்றும் சுஷின் ஷியாமின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சூர்யாவின் அடுத்தடுத்த படங்களான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகியவற்றைத் தொடர்ந்து ‘சீன் – SCENE’ படமும் வெளியாகவுள்ளதால், சூர்யா ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

‘சீன் – SCENE’ திரைப்படம் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Comments (0)
Add Comment