நடிப்பா… இயக்கமா…? ஜேசன் சஞ்சய் சொன்ன சுவாரஸ்ய பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் பேசிய நடிகை மகாலக்‌ஷ்மி, “இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் சஞ்சய்க்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

கலை இயக்குநர் பெஞ்சமின் பேசுகையில், “சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ, அதைத்தான் படமாக்கியிருக்கிறார். நானும் எனது பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி” என்றார்.

நடிகர் அன்புதாசன், “இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

நடிகர் ஷிவ் பண்டிட், “கடந்த ஒன்றரை வருடங்களாக எங்களுடைய உழைப்பிற்கு ஆதரவு கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த சஞ்சய் ப்ரோ மற்றும் லைகா நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.

நடிகை ஃபரியா அப்துல்லா பேசுகையில், “ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தமிழ்குமரன் பேசுகையில், “சஞ்சய் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இனி இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில், “கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணித்த லைகா நிறுவனத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘சிக்மா’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் நடிப்பா, இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் என்னை வாழ்த்தினர்” என்றார்.

இதன் மூலம், தனது முதல் படமான ‘சிக்மா’வின் வெளியீட்டுக்குப் பிறகே தொடர்ந்து நடிப்பதா அல்லது இயக்கத்தில் கவனம் செலுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யவுள்ளதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment