தமிழ் திரையுலகில் ‘சிக்மா’ மூலம் அறிமுகம்… மகிழ்ச்சியில் ஃபரியா அப்துல்லா!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வாய்மொழிப் பாராட்டுகளால், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆக்‌ஷன், அட்வென்ச்சர், ஹெய்ஸ்ட் மற்றும் எண்டர்டெயின்மென்ட் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகை ஃபரியா அப்துல்லா தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் என இளம் திறமையாளர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் வெற்றி, ஃபரியாவின் தமிழ் அறிமுகத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.

தமிழில் அறிமுகமாகியிருப்பது குறித்து ஃபரியா அப்துல்லா கூறுகையில், “சஞ்சயுடன் பணியாற்றியது அற்புதமான அனுபவம். அவர் உருவாக்க விரும்புவதைப் பற்றி மிகவும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் படமாக்கினார். அவரது நிதானமான அணுகுமுறையால் நாங்களும் உற்சாகமாகப் பணியாற்றினோம்.

‘சிக்மா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருப்பது எனக்கு பெருமை. தற்போது படத்தை திரையரங்குகளில் பார்த்து, ரசிகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெறுவது, இந்தப் பயணத்தை மேலும் மறக்க முடியாததாக மாற்றியுள்ளது” என்றார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஃபரியா அப்துல்லா, நடிப்புடன் பல்வேறு கலைத் துறைகளிலும் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட அவர், ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீட் நடனம் உள்ளிட்ட பல்வேறு நடன வடிவங்களில் பயிற்சி பெற்றுள்ளார். பள்ளிப் பருவத்திலேயே நுண்கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவர், பின்னர் மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பயிற்சி பெற்றதன் மூலம், நடிப்பு மற்றும் கதை சொல்லலில் வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக திரைத்துறையிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

நடிப்புடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ராப் இசையை எழுதி, பாடி வரும் ஃபரியா, இசை வீடியோக்களை இயக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு இசை வீடியோவை தயாரித்ததன் மூலம், கேமராவுக்குப் பின்னாலும் தனது படைப்புப் பயணத்தை விரிவுபடுத்தியுள்ளார்.

ஃபரியாவின் நடிப்புப் பயணம் 2021 மார்ச் மாதம் வெளியான ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் தொடங்கியது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்த திரைப்படம், ஃபரியாவை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து ‘மது வடலரா 2’, ‘ஆ ஒக்கட்டி அடக்கு’, ‘குர்ராம் பாப்பி ரெட்டி’, ‘கயாபடா சிம்ஹம்’, ‘ராவணசுறா’ மற்றும் ‘லைக் ஷேர் சப்ஸ்கிரைப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், SonyLIV-ல் வெளியான ‘தி ஜென்காபுரு கர்ஸ்’ வெப் சீரிஸ் மூலம் இந்தி திரைத்துறையிலும் அறிமுகமானார். தற்போது ‘சிக்மா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வள்ளிமயில்’ திரைப்படத்திலும் ஃபரியா நடித்துள்ளார்.

‘சிக்மா’ திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சஞ்சீவ் கிரியேட்டிவ் புரொடக்ஷன் பணிகளை கவனித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஃபரியா அப்துல்லாவுக்கு, ‘சிக்மா’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.

Comments (0)
Add Comment