‘ஹைக்கூ’ படத்தின் டிரெய்லர் வெளியானது – மனதை வருடும் காதலும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி!

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்த வரிசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹைக்கூ’. இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் 145 விநாடிகள் நீளும் டிரெய்லர், படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக மனோ என்ற கதாபாத்திரத்தில் ஏகன் வருவதும், அதன் பின்னர் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களும் நகைச்சுவையான முறையில் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. கல்லூரி கலாட்டா, காதல், கலர்ஃபுல் காட்சிகள், கதாபாத்திரங்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும் அதே நேரத்தில், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.

‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீதேவி, ‘ஹைக்கூ’ படத்திலும் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். அதேபோல் ஃபெமினா ஜார்ஜ் தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் கதைக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோரின் எனர்ஜி மற்றும் கெமிஸ்ட்ரி படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.

படம் குறித்து நடிகர் ஏகன் கூறுகையில், “‘ஹைக்கூ’ ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். அதே நேரத்தில் இதற்குள் ஒரு ஆழமான கருத்தும் இருக்கிறது. பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் படம் இயல்பாக எடுத்துச் சொல்கிறது. எந்தக் கருத்தையும் போதிக்கும் வகையில் இல்லாமல், கதைக்குள் அதை இயல்பாக இணைத்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இந்தப் படம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோருடன் அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை பிரேம் கருந்தமலை கவனித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். காதல், நகைச்சுவை, இளமை மற்றும் உணர்வுகளை கலந்து உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment