தமிழ் ZEE5-ல் பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகிறது. புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் உருவாகியுள்ள இந்தப் புதிய சீசன், முதல் சீசனைத் தொடர்ந்து நீதித்துறை அமைப்பின் சிக்கலான பக்கங்களை மேலும் ஆழமாக ஆராய்கிறது.
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2வில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அவரது வலுவான திரை ஆளுமை புதிய கதைக்களத்திற்கு கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது. அதேவேளையில், முதல் சீசனில் கதையின் மையக் கதாபாத்திரமாக நடித்த சரவணன், தனது கதாபாத்திரத்தைத் தொடர்ந்து ஏற்று நடிக்கிறார்.
முதல் சீசனில், தனது மகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தந்தை தீக்குளித்த சம்பவத்தைச் சுற்றி கதை நகர்ந்தது. ஆரம்பத்தில் எளிமையான விசாரணையாகத் தோன்றிய அந்த வழக்கு, அதிகாரம், செல்வாக்கு மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் பின்னிப் பிணைந்த சிக்கலான வலையாக மாறியது. நீதியை நிலைநாட்ட சரவணன் மேற்கொள்ளும் முயற்சிகளையும், அதற்காக அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் முதல் சீசன் விறுவிறுப்பாக எடுத்துச் சென்றது.
இந்நிலையில், ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 முற்றிலும் புதிய வழக்குடன் தொடர்கிறது. நீதியின் சாம்பல் நிறப் பகுதிகளை மேலும் ஆழமாக ஆராயும் இந்த சீசனில், நீதிமன்றத் தீர்ப்புகளைத் தாண்டி அதிகாரம், சலுகை மற்றும் தனிப்பட்ட முடிவுகள் எவ்வாறு உண்மையை நோக்கிய பாதையை தீர்மானிக்கின்றன என்பது குறித்து கதை பேசுகிறது.
புதிய சவால்கள் தொடர்ந்து உருவாகும் நிலையில், நீதியைத் தேடும் முயற்சியில் தனிநபர்கள் எந்த அளவிற்கு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் இந்த சீசன் ஆராய்கிறது. அதேசமயம், உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் சிந்திக்கத் தூண்டும் வகையிலும், விறுவிறுப்பான சட்ட நாடகமாகவும் இந்த புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.
முதல் சீசனின் நேர்மையான மற்றும் யதார்த்தமான கதையாடலைத் தொடர்ந்து, புதிய வழக்கு, புதிய கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான மோதல்களுடன் ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 அக்டோபர் 23ஆம் தேதி முதல் தமிழ் ZEE5 தளத்தில் வெளியாகிறது.