ப்ளாக் ஹோல் முதல் சூனியக்காரி – தேவதை வரை… ஃபேண்டஸி உலகை காட்டும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர்!

ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி எனப் பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ப்ளாக் ஹோல் எனும் மர்மமான இடத்துக்குள் மூவர் நுழைவதையும், அந்த இடம் குறித்து விசாரணை நடத்தும் காவல் அதிகாரியையும், சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே நடைபெறும் மோதலையும் மையமாகக் கொண்டு ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. மர்மம், மாயாஜாலம் மற்றும் நகைச்சுவை என வித்தியாசமான அம்சங்களுடன் நகரும் டிரெய்லர், படத்தின் கற்பனை உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

குறிப்பாக, ‘விட்ச் Vs ஏஞ்சல்’ எனும் மோதலை மையப்படுத்தியுள்ள புதிய போஸ்டர் படத்தின் ஃபேண்டஸி உலகத்தை மேலும் வெளிப்படுத்துகிறது. சிவப்பு நிற ஆடையில் சூனியக்காரி போன்ற தோற்றத்தில் ஒரு பெண்ணும், வெள்ளை நிற ஆடையில் தேவதை போன்ற தோற்றத்தில் மற்றொரு பெண்ணும் நேருக்கு நேர் மோதும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே உருவாகும் மாயாஜால சக்திகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மர்மமான கதாபாத்திரங்கள், மாயாஜாலக் காட்சிகள், விறுவிறுப்பான சம்பவங்கள் மற்றும் காமெடி என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ‘டிரோன்ஸ்’ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை R. ராகவ் மிர்தாத் கவனித்துள்ளார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் ‘டிரோன்ஸ்’, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக வித்தியாசமான கற்பனை உலகங்களையும் மாயாஜாலக் கதைகளையும் விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் புதிய திரையனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

GM Morgan Films தயாரிக்கும் இப்படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் வெளியிடுகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment