மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்றது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்கு முன்னதாகவே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் உருவாகி வருகிறது. அண்மையில் வெளியான ‘மாகாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதுடன், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். செல்வா RK படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் மேற்கொள்கின்றனர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள ‘மாகாளி’ படக்குழு, தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.