புதுப்புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்குத் தொடர்ந்து பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கி வரும் ZEE தமிழ், இந்த weekend-ஐ மேலும் சிறப்பாக்கும் வகையில் இரண்டு புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கியுள்ளது. இசை ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ‘சரிகமப’ நிகழ்ச்சியின் புதிய சீசனும், மாஸ் மற்றும் கிளாஸ் என இரு அணிகளுக்கு இடையிலான கலகலப்பான போட்டியை மையமாகக் கொண்ட ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகியுள்ளன.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பிரம்மாண்ட தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகள் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பத்து சீசன்களைக் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள ‘சரிகமப’, வெறும் பாடல் போட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பல திறமையான பாடகர்களை அடையாளம் கண்டு அவர்களின் இசைப் பயணத்திற்கு சிறந்த தளமாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் 500 எபிசோட்களைக் கடந்ததையொட்டி கோவையில் பிரம்மாண்டமான வெற்றி கொண்டாட்டமும் நடைபெற்றது.
ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது குரல்கள், அசத்தலான இசை நிகழ்ச்சிகள் மற்றும் மனதைத் தொடும் தருணங்களை வழங்கி வரும் ‘சரிகமப’, இந்த புதிய சீசனிலும் திறமையான போட்டியாளர்களுடன் ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கத் தயாராகியுள்ளது. இசை உலகின் அனுபவமிக்க கலைஞர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாகவும், அர்ச்சனா தொகுப்பாளராகவும் இணைந்துள்ளனர்.
‘சரிகமப’ குறித்து பேசிய நடுவர் ஸ்ரீனிவாஸ், “பத்து ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் மேடைதான் ‘சரிகமப’. குறிப்பாக கிராமங்களில் இருந்து வரும் போட்டியாளர்கள் வெற்றி பெறும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருக்கிறேன். ஆனால் இத்தகைய பிரம்மாண்டத்தை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவிற்கு இந்த சீசன் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.
நடுவர் விஜய் பிரகாஷ் பேசுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பு இதே ‘சரிகமப’ நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த நான், இன்று நடுவராக இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக உள்ளது. இந்த நிகழ்ச்சி பலருக்கு ஒரு தொழிலையும், ஒரு வாழ்க்கையையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இங்கிருந்து வந்த போட்டியாளர்கள் இன்று உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதுதான் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் வெற்றி மற்றும் அதன் வீச்சு. இந்த சீசனின் அரங்கம், காட்சியமைப்பு, தயாரிப்பு என அனைத்தும் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியின் ஆன்மா மட்டும் எப்போதும் மாறாமல் இருப்பதுதான் இதன் சிறப்பு,” என்றார்.
ஸ்வேதா மோகன் கூறுகையில், “இந்த சீசனில் முதல் முறையாக 360 டிகிரி அரங்கில் ‘சரிகமப’ நிகழ்ச்சியை பார்க்கப் போகிறோம். எந்தப் பக்கம் திரும்பினாலும் இசையை உணரக்கூடிய அளவிற்கு அரங்கம் பிரம்மாண்டமாக உள்ளது. எனக்கு ‘சரிகமப’ குடும்பம் ஒரு கூட்டில் வாழும் கிளிகள் போன்றது. போட்டியாளர்களுக்கு நாங்கள் நடுவர்களாக மட்டுமல்லாமல், mentors, friends மற்றும் guides ஆகவும் இருக்கிறோம். மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் போட்டியாளர்களுக்கும் வழங்கும் அன்புதான் எங்களுக்கான மிகப்பெரிய பலம்,” என்றார்.
இதனைத் தொடர்ந்து, ZEE தமிழின் மற்றொரு புதிய நிகழ்ச்சியான ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ குறித்த தகவல்கள் பகிரப்பட்டன. மாஸ் பசங்க ஒரு புறமும், கிளாஸ் பொண்ணுங்க மறுபுறமும் என இரு அணிகளாகப் பிரிந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். அவர்களின் தனித்துவமான ஸ்டைல், அணுகுமுறை, திறமை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் சவால்கள் இடம்பெற உள்ளன.
கிகி விஜய் மற்றும் அசார் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். போட்டிகளுக்கு இடையே உருவாகும் நகைச்சுவை, நட்பு, சவால்கள் மற்றும் எதிர்பாராத தருணங்கள் நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி குறித்து ஆர்யா பேசுகையில், “இது 100 சதவீதம் முழுமையான fun and entertainment-க்கு உத்தரவாதம் அளிக்கும் நிகழ்ச்சி. மிகவும் சுவாரஸ்யமான lineup-ல் ஆண் மற்றும் பெண் பிரபல போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். மாஸ் பசங்க மற்றும் கிளாஸ் பொண்ணுங்க தங்களுடைய style, attitude, emotions மற்றும் talent என அனைத்தையும் வெளிப்படுத்தப் போகிறார்கள். இது வெறும் competition மட்டும் கிடையாது. Fun, friendship மற்றும் ஜாலியான தருணங்கள் என நிறைய விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் இருக்கும்,” என்றார்.
ரெஜினா கசாண்ட்ரா பேசுகையில், “ஆர்யா சொன்னது போல இந்த நிகழ்ச்சியின் title கேட்டவுடனே எனக்கும் curiosity ஏற்பட்டது. அதே நேரத்தில் ஒரு சந்தேகமும் வந்தது. ஏன் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ என்று வைத்தார்கள்? ‘கிளாஸ் பொண்ணுங்க Vs மாஸ் பசங்க’ என்று வைத்திருக்கலாமே? ஆர்யாதான் இப்படியொரு title வைக்கச் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது,” என சிரித்தபடி கூறினார்.
மேலும், “ZEE தமிழில் இப்படியொரு fresh concept-ல் ஒரு நிகழ்ச்சி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியில் competition எப்படி இருந்தாலும் entertainment-க்கு பஞ்சமே இருக்காது,” என்றார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகள் குறித்து ZEE தமிழ் Chief Channel Officer வி.எஸ். ராகவன் பேசுகையில், “ZEE தமிழ் தொடர்ந்து புதிய, வித்தியாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று ‘சரிகமப’ மற்றும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ என இரண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துகிறோம்.
‘சரிகமப’ வெறும் singing show கிடையாது. பலருடைய திறமை மற்றும் கனவுகளுக்கு ஒரு பெரிய தளமாக அது அமைந்துள்ளது. இந்த புதிய சீசன் இன்னும் பிரம்மாண்டமாகவும், இசை, உணர்வு மற்றும் பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் இருக்கும். இந்த பயணத்தில் நடுவர்களான விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ் மற்றும் ஸ்வேதா மோகனின் பங்களிப்பு மிகப்பெரிய பலம்.
அதேபோல், ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ வெறும் fun-filled entertainment show மட்டுமல்ல. ஆண், பெண் இருவருக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளும் புதிய அனுபவமாகவும் இந்த நிகழ்ச்சி அமையும். ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா mentor மற்றும் role model ஆக இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்,” என்றார்.
ZEE தமிழ் Programming Head கௌஷிக் நரசிம்மன் பேசுகையில், “இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய scale-ல் உருவாக்கப்பட்டுள்ளன. ‘சரிகமப’ இன்று ZEE தமிழின் முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது. இந்த புதிய சீசன் இன்னும் பிரம்மாண்டமாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலும் இருக்கும். அதேபோல், ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ முழுக்க முழுக்க fun, energy மற்றும் entertainment நிறைந்த புதிய அனுபவமாக இருக்கும்,” என்றார்.
ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் நடுவர்களாகவும், அர்ச்சனா தொகுப்பாளராகவும் இணைந்து வழங்கும் ‘சரிகமப’ நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.
ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இணையும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சி கிகி விஜய் மற்றும் அசார் தொகுப்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.
இசை, போட்டி, நகைச்சுவை, நட்பு மற்றும் பொழுதுபோக்கு என இந்த weekend-ஐ உற்சாகமாக்கும் வகையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளன.