பழங்குடியின மக்களின் மருத்துவப் போராட்டமும் மாற்றமும் – ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம்!

இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணன் இயக்கியுள்ள ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ (The Valley of Health) ஆவணப்படம், தமிழ்நாட்டின் சிட்லிங்கி பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மருத்துவ மற்றும் சமூக மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான 18வது சர்வதேச கேரள ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் (IDSFFK) இப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியில் அமைந்துள்ள சிட்லிங்கி பள்ளத்தாக்கில் வாழும் பழங்குடியின மக்கள், 1990களில் எதிர்கொண்ட மருத்துவ நெருக்கடிகளை இப்படம் எடுத்துரைக்கிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில், அப்பகுதிக்கு வந்த இரண்டு மருத்துவர்கள் 1993ஆம் ஆண்டு ‘Tribal Health Initiative’ (THI) என்ற அமைப்பைத் தொடங்கினர். சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, பின்னர் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கும் சமூகப் பங்களிப்பு மிக்க அமைப்பாக வளர்ந்தது. இந்த முன்னெடுப்பு பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதையும் ஆவணப்படம் பதிவு செய்கிறது.

பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மருத்துவச் சேவைகளைப் பெறுவதில் அவர்கள் சந்திக்கும் தடைகள், சமூகப் பங்கேற்பின் முக்கியத்துவம் மற்றும் நிலையான மாற்றத்திற்கான வழிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவம் வணிகமயமாகி வரும் சூழலில், ஒரு சமூகமே தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னெடுத்த முயற்சியை வெளிப்படுத்தும் படைப்பாகவும் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ அமைந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் சங்கர நாராயணன் கூறுகையில், “பழங்குடியின சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், மருத்துவ உதவியைப் பெறுவதில் சந்திக்கும் தடைகளையும் உலகம் அறிய வேண்டும் என்று நினைத்தேன்.

மருத்துவம் நாளுக்கு நாள் வணிகமயமாகி வரும் இந்தக் காலகட்டத்தில், தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண முன்வந்த ஒரு பள்ளத்தாக்கின் கதை, மிகவும் அவசியமான மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது. இது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையைப் பேசுகிறது. அதே நேரத்தில், எது தவறாக இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டாமல், அதற்கான தீர்வையும் இந்தப் படம் முன்வைக்கிறது. இந்தக் கதையைத் தேர்வு செய்ய என்னைத் தூண்டிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் பாராட்டுகள் எனது பொறுப்புணர்வை அதிகரித்துள்ளதுடன், இதுபோன்ற கதைகளை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் வலுப்படுத்தியுள்ளன” என்றார்.

மருத்துவச் சேவையின் வளர்ச்சியை மட்டும் பேசாமல், ஒரு சமூகத்திற்குத் தனது வாழ்க்கைச் சூழலை மாற்றுவதற்கான வாய்ப்பும் நம்பிக்கையும் வழங்கப்படும்போது எத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகின்றன என்பதையும் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. சிட்லிங்கியின் அனுபவத்தின் வழியாக, சமூக அக்கறையும் கூட்டு முயற்சியும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் இப்படம், சர்வதேசத் திருவிழாவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment