‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் (Insomniac’s Dream Creations) தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இளம் நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். வெளியான போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
முந்தைய பாகத்தில் மர்மம், விசாரணை மற்றும் உணர்வுபூர்வமான திருப்பங்களுடன் கூடிய திரில்லர் கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், அதன் அடுத்த பாகத்திலும் பரபரப்பான கதைக்களத்தைக் கையிலெடுத்துள்ளார். ‘இறுதிப்பக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், புதிய மர்மமும் பதற்றமும் நிறைந்த திரில்லர் அனுபவத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரத்த வெள்ளத்தில் தலைகீழாகக் கிடக்கும் பெண், அவரைச் சுற்றிச் சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்கள் என மர்மமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிறக் காரும், பெண்ணைச் சுற்றிப் பரவியிருக்கும் ரத்தம் கார் செல்லும் பாதையாக நீள்வதும் போஸ்டரின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக அமைந்துள்ளன. இந்தக் காட்சிகள் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், விசாரணையை மையமாகக் கொண்ட கதைக்களத்தையும் உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பதைக் கண்டறிய ஒரு தரப்பு தீவிரமாக முயற்சி செய்கிறது. அதேவேளையில், குற்றம் வெளிச்சத்துக்கு வந்துவிடாமல் மறைப்பதற்காக மற்றொரு தரப்பு போராடுகிறது. கொலையின் பின்னணியைக் கண்டறிய முயலும் தரப்புக்கும், உண்மையை மறைக்க நினைக்கும் தரப்புக்கும் இடையே நடைபெறும் ஆடு–புலி ஆட்டமே ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. விசாரணையுடன் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் இணைத்து, எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம், முந்தைய படத்தின் தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், புதிய கதைக்களத்துடன் வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘குமார சம்பவம்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
சென்னை மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
மர்மம், கொலை விசாரணை, குற்றத்தை மறைக்கும் முயற்சி எனப் பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’, அதன் ஃபர்ஸ்ட் லுக் மூலம் திரில்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.