5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியான விஜய் மில்டனின் ‘தொண்டர் படை Chapter 1: Gods and Soldiers’ ’ படத்தின் ‘நந்தினி’ பாடல்!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ பாடல், சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

இளைஞர்களிடையே பிரபலமாக விளங்கும் ராப் இசைப் பாடகர் பால் டப்பா இப்படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, பாடல் வரிகளை எழுதி, பாடியும் நடனமாடியும் அசத்தியுள்ளார். இளைஞர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் முன்னிலையில் பாடலை வெளியிட வேண்டும் என்ற படக்குழுவினரின் விருப்பத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சவேதா கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் பாடலை வெளியிட்டார்.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்ற இவ்விழாவில், 5000 மாணவர்கள் முன்னிலையில் பாடல் திரையிடப்பட்டது. அப்போது மாணவர்கள் உற்சாகத்துடன் பாடலை வரவேற்று ஆரவாரத்துடன் கொண்டாடினர். இளைஞர்களின் இந்த வரவேற்பு ‘நந்தினி’ பாடல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

துள்ளலான இசையுடனும் சமகால ராப் இசையின் தனித்துவமான அம்சங்களுடனும் உருவாகியுள்ள இப்பாடலில் வேடன், பால் டப்பா, கிஷோர் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இசை, பாடல் வரிகள், குரல் வெளிப்பாடு மற்றும் நடனம் எனப் பல்வேறு அம்சங்களில் பால் டப்பாவின் பங்களிப்பு இடம்பெற்றிருப்பது பாடலின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

விஜய் மில்டன் இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுனன், சுனில், ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், ஜெஃப்ரி, இம்மான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டமான களத்திலும், இளைஞர்களைக் கவரும் அம்சங்களுடனும் உருவாகி வரும் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment