கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

GM Morgan Films தயாரிப்பில், இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழுவினர் தங்களது அனுபவங்களையும் படத்தின் உருவாக்கம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் பேசியதாவது:

“உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இது என்னுடைய முதல் திரைப்படம். இயக்குநர் ராகவ் மிர்தாத் அவர்களை எனது நண்பரின் வீட்டில் சந்தித்தேன். அங்கு பேசிய பத்து நிமிடங்களிலேயே இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். அவர் பல கதைகளைச் சொன்னார். எனக்கு நகைச்சுவைப் படம் வேண்டும் என்று கூறினேன். அப்படித்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக ‘டிரோன்ஸ்’ இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

சினிமாவாலா சதீஷ் பேசியதாவது:

“இந்த மேடை எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. பல ஆண்டுகளாக இங்கு வந்திருக்கிறேன். உங்களுடன் அமர்ந்திருக்கிறேன். உங்களிடமிருந்துதான் என்னுடைய பயணம் தொடங்கியது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்காததால் தொழில்நுட்பத் துறையைத் தேர்ந்தெடுத்து எனது பயணத்தைத் தொடர்ந்தேன். இன்று மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் மற்றும் இயக்குநர் ராகவ் மிர்தாத் ஆகியோருக்கு நன்றி.

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திலும் திறமையான பலர் பணியாற்றியிருக்கிறார்கள். நான் நடித்த முதல் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எப்படித் தனித்துவமான, வழக்கத்திற்கு மாறான திரைப்படமாக இருந்ததோ, அதேபோன்ற வித்தியாசமான அணுகுமுறை ‘டிரோன்ஸ்’ படத்திலும் இருக்கும். சாத்தியமா என்று தோன்றக்கூடிய கற்பனைகளைத் திரையில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். அந்தப் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவைப் போலவே இந்தப் படத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

ஆர்.ஜே. தீபக் பேசியதாவது:

“நடிகராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. வானொலியில் நான் செய்த பணியின் மூலம் கிடைத்த அங்கீகாரம், இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் சிறிது நேரம் மட்டும் வந்து செல்லும் கதாபாத்திரமாக இல்லாமல், படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ராகவ் மிர்தாத் மற்றும் தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் ஆகியோருக்கு நன்றி.

இந்தப் படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். அஞ்சலி நாயர் உணர்வுபூர்வமாக நடிக்கக்கூடியவர். சித்தி இத்னானியும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் இப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்,” என்றார்.

நடிகை அஞ்சலி நாயர் பேசியதாவது:

“இந்தப் படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். எங்கள் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. சிறிய குழுவாக இருந்தாலும், வலிமையான குழுவாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.

‘டிரோன்ஸ்’ திரைப்படம் ஃபேண்டஸி, ஹாரர் மற்றும் சர்வைவல் அம்சங்களைக் கொண்டது. இதில் பல விசித்திரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், ரசிகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் சார்ந்த சில தீவிரமான விஷயங்களையும் இப்படம் பேசுகிறது. அவற்றைச் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு பாணியில் ரசிகர்களிடம் கொண்டுசேர்க்க முயற்சி செய்திருக்கிறோம். இதுபோன்ற புதிய கருத்துகளைக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது:

“இன்று உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினிகாந்த் சாரின் படத்துடன் எங்களுடைய சிறிய படமும் வெளியாவது எங்களுக்குப் பெருமையும் கௌரவமும் அளிக்கிறது. தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருபவர் தலைவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது.

‘டிரோன்ஸ்’ ஒரு சிறிய படமாக இருந்தாலும், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் முதலீடு செய்திருக்கிறார். அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதோடு லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், இயக்குநர் ராகவ் போன்ற படைப்பாளிகளுக்கும், ஜி.எம். மோர்கன் போன்ற தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பளித்து, அவர்கள் புதிய திரைப்படங்களை உருவாக்க ஊடக நண்பர்களும் பத்திரிகையாளர்களும் ஆதரவளிப்பது முக்கியம்.

அஞ்சலி நாயருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். ‘டிரோன்ஸ்’ படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் டிராவிட் செல்வம் பேசியதாவது:

“‘டியூட்’ படத்தை முடித்திருந்தபோது இந்தப் படத்தின் கதையைக் கேட்டேன். இரண்டு கதாநாயகிகள் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். வழக்கமாக நான் செய்யும் நகைச்சுவைப் படைப்புகளிலிருந்து மாறுபட்டு, இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஒப்புக்கொண்டேன்.

‘டிரோன்ஸ்’ படத்தை ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்கிவிட முடியாது. இதில் ஹாரர், நகைச்சுவை எனப் பல அம்சங்கள் உள்ளன. குழந்தைகள் ரசிக்கக்கூடிய மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதை எனப் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. சிறிய படத்தில் அரசியல் கருத்துகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்துக் கொடுப்பதற்குத் தயாரிப்பாளருக்குத் தைரியம் வேண்டும். அந்த வகையில், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த ஜி.எம். மோர்கன் அவர்களுக்கு நன்றி.

என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். சித்தி இத்னானி அனுபவம் மிக்கவராக இருந்தாலும், எந்தப் பந்தாவும் இல்லாமல் எங்களுடன் நண்பராகப் பழகினார். அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.

இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான வாய்ப்பு கிடைத்ததற்குச் சினிமாவாலா சதீஷ் அண்ணனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோருக்கும் நன்றி. ரசிகர்கள் ‘டிரோன்ஸ்’ படத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். குறைகள் இருந்தால், அடுத்த முறை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்று அறிவுரை கூறுங்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்,” என்றார்.

கற்பனையும் மர்மமும் கலந்த வித்தியாசமான உலகம்!

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், தனது அடுத்த படைப்பாக ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் உருவாகியுள்ள இப்படம், மர்மமும் மாயாஜாலமும் நிறைந்த புதிய உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேட் சயின்டிஸ்ட், துப்பறிவாளர், தேவதை, சூனியக்காரி என வித்தியாசமான கதாபாத்திரங்களும், அவற்றைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களும் படத்தின் கதைக்களத்திற்குச் சுவாரஸ்யம் சேர்க்கின்றன.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆர். கிஷோர் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். GM Morgan Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.

வழக்கமான கதைக்களங்களிலிருந்து மாறுபட்ட கற்பனை உலகத்தையும், ஹாரர், ஃபேண்டஸி, நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒருங்கிணைத்துள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment