‘யாரும் பசியுடன் இருக்கக் கூடாது’ – விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த #ZEROHUNGER உணவு வழங்கும் நிகழ்வு!

பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் நோக்கில், ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த #ZEROHUNGER பிரியாணி வழங்கும் நிகழ்வை இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்தார். சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள பேரம்பாக்கம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 5,000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

வீதியோரங்களில் வசிப்பவர்கள், வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ஒருவேளை உணவுகூடக் கிடைப்பது சவாலாக உள்ளது. இந்தச் சூழலை உணர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ஆலன் சாமுவேல், தனது நண்பர்களுடன் இணைந்து ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்தின் தன்னார்வலர்கள், தரமான உணவைத் தயாரித்து, பசியால் வாடும் மக்களை நேரில் சந்தித்து உணவு வழங்கி வருகின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக உலக உணவு நாளை முன்னிட்டு இந்நிறுவனம் உணவு வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு முன்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உணவு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் பேசிய விக்னேஷ் சிவன், “இன்றைய சூழலில் நம்மில் பலருக்கு பிரியாணி என்பது விடுமுறை நாட்களில் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறிவிட்டது. நான் கல்லூரியில் படித்த காலத்தில், விலை குறைவு என்பதற்காகப் பிரியாணியைத் தவிர்த்துவிட்டு குஸ்கா மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், ஒருவேளை உணவுகூடக் கிடைக்காதவர்களுக்கு பிரியாணியைச் சாப்பிடுவது என்பது எளிதில் நடக்காத ஒன்று.

இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இத்தகைய முயற்சியை முன்னெடுத்தபோது, இதில் பங்கேற்க விரும்பினேன். இதன் மூலம் ஏழை எளிய மக்கள், வீடற்றவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் பயனடைவதைப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

உலக உணவு நாளை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சுவையான பிரியாணி வழங்கிய இந்த முன்னெடுப்பு சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. பசியைப் போக்குவதுடன், உணவு கிடைக்காமல் தவிப்பவர்களின் நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ சேவைகள்

‘யாரும் பசியுடன் இருக்கக் கூடாது’ என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தன்னார்வலர்களின் பங்களிப்புடனும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களின் சிறிய அளவிலான நன்கொடைகளுடனும் இயங்கி வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாகச் சாலையோரங்களில் உறங்குபவர்களுக்குப் போர்வைகள் வழங்குவது, கொரோனா காலகட்டத்தில் வீதியோரங்களில் வசித்தவர்களைத் தேடிச் சென்று உணவளிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தினமும் சுமார் 400 பேருக்குத் தேவையான உணவைத் தயாரித்து, அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கி வருகிறது.

மேலும், தொழுநோயாளிகளுக்கு உணவளித்தல், மதுராந்தகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கான திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுதல், குடிநீர் வசதியற்ற கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான முயற்சிகளுக்கு உதவுதல் எனப் பல்வேறு சமூக நலப் பணிகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, பசியைப் போக்குவதையும் சமூக நலனையும் மையமாகக் கொண்டு ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ தொடர்ந்து தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது.

Comments (0)
Add Comment