பட்டுப் புடவைக்குப் பின்னால் ஒரு கவித்துவமான கதை… சுஹாஸின் ‘ஹைட் & சில்க்’ கிளிம்ப்ஸ் வெளியானது!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும் இதனை வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இதுவரை 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தும் அவர், நான்கு திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் உருவாகும் முதல் திரைப்படம் ‘ஹைட் & சில்க்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் புதிய முயற்சியில் கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் வர்திகா ஜெயினின் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

‘மண்டாடி’ படத்தைத் தொடர்ந்து சுஹாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘லப்பர் பந்து’, ‘DC’ ஆகிய படங்களில் நடித்த சஞ்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மூத்த நடிகர் தனிகெல்லா பரணி முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் நந்து, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இது அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமாகும்.

வெளியாகியுள்ள டைட்டில் கிளிம்ப்ஸ், படத்தின் தனித்துவமான உலகத்தை அறிமுகப்படுத்துகிறது. பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளரின் வாழ்க்கையும், நவீன காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் சந்திக்கும் தருணத்தை மையமாகக் கொண்டு காட்சிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பட்டுப் புடவைக்கும் அதை அணிய வேண்டிய ஒரு பெண் விதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற கவித்துவமான சிந்தனையை நெசவாளரின் குரல் வெளிப்படுத்துகிறது. புடவையின் உண்மையான அழகு அதை நெய்யும் செயல்முறையைத் தாண்டியும் இருக்கிறது என்றும், நெசவாளர் புடவையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே அது தனக்குரிய பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறது என்றும் கிளிம்ப்ஸ் உணர்த்துகிறது. முற்றிலும் மாறுபட்ட இரு உலகங்களைச் சேர்ந்தவர்களின் சந்திப்பு, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் குறிப்பிடத்தக்க கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவைக் கையாள, ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ‘3 BHK’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். ‘அனிமல்’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

ஜஷுவா சண்டைப் பயிற்சியையும், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். ஷெரீப் நடன இயக்குநராகவும், மோகன் ராஜன் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்ள, ஒலி கலவையை சுரேன் ஜி கவனிக்கிறார். அமோல் போடகே கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்திகா ஜெயின் இணைந்து தயாரிக்கும் ‘ஹைட் & சில்க்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment