‘சிக்னல் அட் 11:30’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் புஜிதா பொன்னாடா!

மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் மூலம் நடிகை புஜிதா பொன்னாடா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ளனர். சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 30-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தனது திரைப்பயணத்தில் ‘சிக்னல் அட் 11:30’ ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கும் புஜிதா பொன்னாடா, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்த இவர், சென்னையில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். கல்வி மற்றும் பணிக்கு இடையே ஓவியம், நடனம் உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

குறும்படங்களில் நடிக்குமாறு ஓர் இயக்குநர் அணுகியபோது, எதிர்பாராத விதமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்தார் புஜிதா. இவர் நடித்த ‘பரிச்சயம்’ என்ற குறும்படம் இயக்குநர் சுகுமாரின் கவனத்தை ஈர்த்தது. விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பின் மூலம் சுகுமாரைச் சந்தித்த புஜிதா, பின்னர் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவான ‘தர்ஷகுடு’ திரைப்படத்தில் நடிக்கத் தேர்வானார். தொடர்ந்து ராம் சரண் நடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்திலும் ஆடிஷன் மூலம் வாய்ப்பு பெற்றார். நடிப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மென்பொருள் பொறியாளர் பணியிலிருந்து விலகி முழுநேரமாகத் திரைத்துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதுவரை சுமார் 25 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ‘சிக்னல் அட் 11:30’ மூலம் தமிழ்த் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

‘சிக்னல் அட் 11:30’ கதையை உடனடியாக ஏற்றுக்கொண்டேன்!

இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து புஜிதா பொன்னாடா கூறுகையில், “இயக்குநர் மலர்விழி கதையை விவரித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு பெண் கதையை எழுதி இயக்கும்போது, பெண் கதாபாத்திரங்கள் தனித்துவத்துடனும் திரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என நம்புகிறேன். மலர்விழி மேம் கதையை விவரித்தபோது, எனது கதாபாத்திரத்தை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல, காட்சிகள் என் கண்முன்னே விரிந்தன.

பொதுவாக, ஒரு கதை பிடித்திருந்தாலும் அதில் நடிப்பது குறித்து முடிவெடுக்க எனக்குச் சிறிது காலம் தேவைப்படும். ஆனால், ‘சிக்னல் அட் 11:30’ படத்தைப் பொறுத்தவரை கதையைக் கேட்டவுடனேயே நடிக்கச் சம்மதித்துவிட்டேன். எனது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை இந்தக் கதாபாத்திரம் எனக்குக் கொடுத்தது” என்றார்.

கார் ஓட்டுவதற்கான பயத்தைப் போக்கிய படப்பிடிப்பு அனுபவம்!

படப்பிடிப்பில் மறக்க முடியாத அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்ட புஜிதா, “நிஜ வாழ்க்கையில் எனக்குக் கார் ஓட்டுவதற்குப் பயம். ஆனால், படத்தில் ரௌடிகள் துரத்தும்போது காரை ஓட்டிச் செல்லும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சியில் நடிக்க முதலில் மிகவும் தயக்கமாக இருந்தது. மலர்விழி மேம் அளித்த நம்பிக்கையும் ஊக்கமும் எனக்குத் தைரியத்தைக் கொடுத்ததால் நடிக்கச் சம்மதித்தேன்.

போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதால் அந்தக் காட்சியை நள்ளிரவில் படமாக்கினோம். அந்த இரவுடன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால், வெவ்வேறு நாட்களில் கூடுதல் காட்சிகளைப் படமாக்குவதற்காக மீண்டும் வர வேண்டியிருந்தது. முதலில் பயமளித்த அந்த அனுபவம், பின்னர் படத்தில் எனக்குப் பிடித்தமான நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டது” என்றார்.

சந்தோஷ் பிரதாப் உடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்!

படத்தின் காதல் காட்சிகள் அழகிய மலைப் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட புஜிதா, தன்னுடன் இணைந்து நடித்த சந்தோஷ் பிரதாப் மிகவும் தன்மையானவர் என்றும், திறமையான நடிகர் என்றும் பாராட்டினார். மேலும், திரையில் தங்களது ஜோடி ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இப்படத்தின் மூலம் பவ்யா திரிகாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஓர் விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சிக்னல் அட் 11:30’ படப்பிடிப்புத் தளத்தில் மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்ததாகக் கூறினார்.

ஒவ்வொரு திரைப்படமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், தனக்குள் இருக்கும் புதிய பரிமாணங்களைக் கண்டறியவும், நடிப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிப்பதாக புஜிதா நம்புகிறார். சினிமாவைத் தாண்டிப் புத்தகங்கள் வாசிப்பது, பயணம் செய்வது, கதைகளைக் கேட்பது, இசைக் கச்சேரிகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, புதிய கஃபேக்கள் மற்றும் உணவகங்களைத் தேடிச் செல்வது, சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது ஆகியவை இவருக்குப் பிடித்தமானவை. உணவுப் பிரியரான இவர், புதிய உணவு வகைகளைச் சுவைத்துப் பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். மேலும், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாகவும் இருக்கிறார்.

அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும், தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தின் புதிய அத்தியாயத்துக்குத் தொடக்கமாக அமையும் என்றும் புஜிதா பொன்னாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment