நவராத்திரி பண்டிகையின் முதல் நாளை முன்னிட்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ‘இது ராமர் யுகத்தின் தொடக்கம்’ என்ற வாசகத்துடன் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி துபே, ராவணனாக யஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம், நவம்பர் 5, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், விரிவான அரங்க வடிவமைப்புகள், கதாபாத்திரங்களின் ஆடைகள் மற்றும் நுணுக்கமான கலை வடிவமைப்புகள் எனப் படத்தின் இதிகாச உலகத்தைப் பற்றிய முன்னோட்டத்தை இந்தப் புதிய போஸ்டர் வழங்குகிறது. கதையின் மையக் கதாபாத்திரங்களான ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ராவணன் ஆகியோரின் தோற்றங்களும், அவர்களுக்கிடையிலான காட்சி ரீதியான வேறுபாடுகளும் போஸ்டரில் கவனம் ஈர்க்கின்றன.
புதிய போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள படக்குழு, “நவராத்திரியின் புனிதமான இந்த நன்னாளில், ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் கொண்டாடுகிறோம். இது ராமர் யுகத்தின் தொடக்கம்! நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ முதல் பாகம், நவம்பர் 5 முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து பிரீமியம் திரையிடல் தொழில்நுட்பங்களிலும் வெளியாகிறது. தசரா அன்று முன்பதிவு தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற DNEG நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் பங்கேற்றுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5, 2026 அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘ராமாயணா’ திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் தொழில்நுட்பங்களிலும் இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து உலகளாவிய விநியோகப் பொறுப்பை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்தியாவில் பாலிவுட் சந்தைக்கான விநியோகப் பொறுப்பை தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கவனிக்கிறது.
புதிய போஸ்டர் வெளியீடு மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியத் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.