MR Motion Pictures தயாரிப்பில், இயக்குநர் முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் புதிய காதல் திரைப்படம் ‘யுவர்ஸ் லவ்விங்லி’ (Yours Lovingly). ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, முதல் காதல் மற்றும் அந்தக் காலத்தின் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
‘யுவர்ஸ் லவ்விங்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2K காலகட்டத்தின் அழகான நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் வாக்மேன், ஹெட்போன், ஓவியப் பொருட்கள், காகித விமானம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளையும் இசையுடன் இணைந்த நினைவுகளையும் பிரதிபலிக்கும் வாக்மேன் போஸ்டரில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், ‘சூர்யா’, ‘சில்வியா’ என்ற பெயர்கள் எழுதப்பட்டுள்ள பொருளும் அக்கால இளம் வயதுக் காதலின் உணர்வுகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் தலைப்பையும் அதன் கதைக்களத்தின் பின்னணியையும் உணர்த்தும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடிதங்கள், இசை, முதல் காதல்…
செல்போன்களின் பயன்பாடு இன்றைய அளவுக்கு இல்லாத காலகட்டத்தில், வாக்மேன் போன்ற இசைச் சாதனங்கள், நேரடி சந்திப்புகள் மற்றும் கடிதங்கள் வழியாகக் காதலர்கள் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட விதத்தை இப்படம் பேசுகிறது. பள்ளிப் பருவ நட்பு, முதல் காதல், அன்றைய மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என 2000-களின் தொடக்க கால வாழ்க்கையை இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீண்டும் அசைபோடச் செய்யும் வகையிலும், இன்றைய தலைமுறையினருக்கு அன்றைய வாழ்க்கை முறையையும் காதல் உணர்வுகளையும் அறிமுகப்படுத்தும் வகையிலும் இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணி!
‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராம் முருகன் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் செல்வராஜ் எழுதியுள்ளதுடன், தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.எல். ரமேஷ் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். சகிஷ்னா சேவியர் இசையமைக்கிறார். இன்பா பிரகாஷ் கலை இயக்கத்தையும், டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளையும், கலைக்குமார் நடன இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோருடன் ராம்ஜி, பக்ஸ், மைதிலி, சந்திரன், நசாத், துஷார், ஆஷா உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது நெய்வேலி பகுதியில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2K காலகட்டத்தின் காதல், நட்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளைத் திரையில் கொண்டுவரத் தயாராகி வரும் ‘யுவர்ஸ் லவ்விங்லி’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.