நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது. தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்குகிறார்.
ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். திகிலும் நகைச்சுவையும் கலந்த கதைக்களத்துடன் தயாராகும் இந்தப் படத்தை, தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.
தென்காசியில் நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க விழாவில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஐஏஎஸ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்துப் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
தென்காசியில் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும், வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். ரங்கராஜ் பெருமாள் தயாரிப்பு நிர்வாகியாகவும், ராம் குமார் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றுகின்றனர்.
மேலும், ஆடை வடிவமைப்பை அபினந்தினி எம். கவனிக்கிறார். இளங்கோ ஏகாம்பரம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், கே. எஸ். ஹேம்ராஜ் தலைமை தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். எஸ். ஏ. சண்முகம் ஒப்பனைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இப்படத்தின் ஸ்டில்ஸ் பணிகளை ஆனந்தன் மேற்கொள்கிறார்.
தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகவும், ஜெய் – அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா கூட்டணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படமாகவும் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.