இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரக் காணொளிகள் மற்றும் கதாபாத்திர அறிமுகக் காட்சிகள் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனித்துவமான கதை சொல்லும் பாணிக்கும், விறுவிறுப்பான திரைமொழிக்கும் பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொளிகள், படத்தின் வெவ்வேறு பரிமாணங்களையும் கதாபாத்திரங்களின் தனித்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.
விஜய் சேதுபதியுடன் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்!
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும், தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்மாஜி மற்றும் வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையில் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதாக ஏற்கெனவே வெளியான முன்னோட்டக் காட்சிகள் உணர்த்துகின்றன.
ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிறது!
தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவுப் பணிகளை சாம் கே. நாயுடு மேற்கொண்டுள்ளார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை சந்தோஷ் நூஜில்லா கவனிக்க, விஎஃப்எக்ஸ் பணிகளை அனில் பாடூரி மேற்கொண்டுள்ளார்.
பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சார்மி கவுர் வழங்குகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷ்ணு ரெட்டி செயல்படுகிறார்.
‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.