மதுரை மண்ணின் மண்வாசனையுடன் ஜீவா… டிசம்பர் 24-ல் வெளியாகும் ‘தகப்பன்’!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுப் படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘TTT’ திரைப்படத்தைத் தொடர்ந்து, மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் ஜீவா நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது திரைப்பயணத்தில் இப்படம் வித்தியாசமான படைப்பாக அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் (Marshall Robinson) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். உணர்வுபூர்வமான கதைக்களத்திற்கு அவரது இசை கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.பி. நந்தபாலன் கலை இயக்கத்தையும், மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர். ஆடைப் பொறுப்பாளராக எம். செல்வராஜும், ஆடை வடிவமைப்பாளராக ரிதேஷ் செல்வராஜும் பணியாற்றியுள்ளனர். ஒலிப்பதிவை டி. உதய் குமார் கவனித்துள்ளார். தேனி அன்பு புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார்.

ஆர். பாலகுமார் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், பிரிதிவிராஜா சின்னசாமி விநியோகத் தலைவராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளையும், தினேஷ் அசோக் விளம்பர வடிவமைப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே, படத்தின் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

புதிய போஸ்டருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Comments (0)
Add Comment