‘அஸ்வின்ஸ்’ இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் – புதிய படத்தை அறிவித்த சாந்தி டாக்கீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கிய ‘மாவீரன்’, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘3BHK’ என வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கும் திறமையான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகவுள்ளது.

நடிகையாக மட்டுமின்றி, பாடகியாகவும் இசைக் கலைஞராகவும் பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் புதிய தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை எழுதி இயக்கும் தருண் தேஜா, வசந்த் ரவி நடிப்பில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். உளவியல் ஹாரர் பின்னணியில் உருவான அப்படம், வித்தியாசமான கதைக்களம், மிரட்டலான காட்சியமைப்புகள் மற்றும் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஹாரர் வகைத் திரைப்படங்களில் தனது தனித்துவமான இயக்க அணுகுமுறையை வெளிப்படுத்திய தருண் தேஜா, தற்போது ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா, இயக்குநர் தருண் தேஜா, நடிகை ஸ்ருதிஹாசன் என இணைந்துள்ள இந்தப் புதிய கூட்டணி, சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாசமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் விவரங்களைப் படக்குழு அடுத்தடுத்த அறிவிப்புகளாக வெளியிட உள்ளது.

 

Comments (0)
Add Comment