செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பீட்சா பாய்ஸ்’. சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதை, இயக்கம் மற்றும் இசைப் பொறுப்புகளை சேகர் கேசவ் ஷிரின் ஏற்றுள்ளார். இப்படத்தின் மூலம் சிவம் சங்கர் நடிகராக அறிமுகமாகிறார். சரத் லோகிதாஸ்வா வில்லன் கதாபாத்திரத்திலும், பிரபல நடிகர் ஷோப்ராஜ் நாகராஜ் என்ற காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் சஹானா சங்கர், “எங்கள் மகனின் கனவுக்காகவே இந்தப் படம் தொடங்கப்பட்டது. தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல் உள்ளது. இருப்பினும், திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இது எங்களுடைய முதல் படம். அனைவரும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.
பாடலாசிரியர் மதன் குமார் பேசுகையில், “இந்தப் படத்தின் ஒவ்வொரு சூழலிலும் தயாரிப்பாளர்களுடன் பயணித்துள்ளேன். எனக்கு முதல் பாடல் வாய்ப்பளித்த பிரபு சார் மற்றும் இயக்குநர் சேகர் சாருக்கு நன்றி. எனது பாடல் வரிகள் பிடித்திருந்ததால் கூடுதல் வசனகர்த்தாவாகவும் பொறுப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. தமிழ் சினிமாவுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது” என்றார்.
எடிட்டர் கணேஷ் குமார், “என் தம்பி சிவம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். நடிகர் ரமேஷ் பேசுகையில், “வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. ‘காக்கா முட்டை’ படத்திற்குப் பிறகு ‘பீட்சா’ என்ற பெயரைக் கொண்ட படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தயாரிப்பாளரும் நடிகருமான தேனப்பன் பேசுகையில், “கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி அறிமுகமானார். அதேபோல இந்தப் படத்தின் மூலம் சிவம் நடிகராக அறிமுகமாகிறார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “ ‘பீட்சா பாய்ஸ்’ படத்தின் டிரெய்லர், பாடல்கள், இசை என அனைத்தும் நன்றாக வந்துள்ளன. பீட்சா மேற்கத்திய உணவாக இருந்தாலும், நம் ஊர் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி அதைச் சமைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளது. அதை முக்கியமான கருத்தாகப் பார்க்கிறேன். இன்றைய தலைமுறையினரின் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவரும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் கவனிக்கத்தக்கவை. படக்குழுவினர் அனைவரும் இளம் தலைமுறையினராக இருக்கிறார்கள். நாயகன், நாயகி இருவரும் திரையுலகில் பெரிய இடத்தைப் பிடிப்பார்கள் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ்க்குமரன் பேசுகையில், “சினிமா என்பது ஒரு கனவு. அந்தக் கனவில் வெற்றி பெற ‘பீட்சா பாய்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ‘பீட்சா’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதைப் போலவே இந்தப் படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன். சிறு பட்ஜெட் படங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விரைவில் சில நல்ல அறிவிப்புகள் வெளியாக உள்ளன. படம் பெரும் வெற்றி அடைய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் அருள் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் மதன் சாருக்கு நன்றி. காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார். நடிகர் ஜிமிகிலி, “இந்தப் படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றியுள்ளோம். இப்படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் ஒரு உத்வேகம் கிடைக்கும். அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
நடிகை அல்பியா சிக்கந்தர் பேசுகையில், “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படத்தின் இசையும் நன்றாக வந்துள்ளது. நாயகன் சிவம் சங்கர், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துள்ளோம். படம் நன்றாக வந்திருக்கிறது. டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்” என்றார்.
நாயகனாக அறிமுகமாகும் சிவம் சங்கர் பேசுகையில், “என்னுடைய நண்பர்கள், சுரேஷ் சார், அப்துல் சார், மது மேம், பாடலாசிரியர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் என அனைவருக்கும் நன்றி. என்னுடன் நடித்த நண்பர்கள், கதாநாயகி என அனைவரும் நண்பர்களாக இணைந்து பணியாற்றினோம். இதுபோன்ற ஒரு நல்ல கதையைத் தந்த இயக்குநருக்கு நன்றி. எனது தயாரிப்பாளர்கள், அம்மா, அப்பா மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
உத்ரா புரொடக்ஷன்ஸ் ஹரி உத்ரா பேசுகையில், “சிறு பட்ஜெட் படங்களுக்குப் பின்னால் எத்தனை பேரின் கனவும் உழைப்பும் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். நல்ல கதை இருந்தால் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள். நமது கனவுக்காக முழு உழைப்பையும் கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கருத்தை ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் பேசுகிறது. நிச்சயம் அனைவரிடமும் கவனம் பெறும் படமாக இது இருக்கும். டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ சாஸ்தா பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நாயகன், நாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
இயக்குநர் சேகர் கேசவ் ஷிரின் பேசுகையில், “எனது தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி. தற்போது வெளியாகும் பல படங்களில் வன்முறை மற்றும் கிளாமர் அதிகமாக இடம்பெறுகின்றன. ஆனால், ‘பீட்சா பாய்ஸ்’ அப்படிப்பட்ட படம் அல்ல. அம்மா, அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் இந்தப் படத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொல்லும் அளவிற்கு நல்ல கருத்துகளுடன் உருவாகியுள்ளது. பீட்சாவில் பல வகைகள் இருப்பதைப் போலவே, இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கும். சிறு பட்ஜெட் படங்களுக்கு ஊடகங்களும் மக்களும் நிச்சயம் ஆதரவு அளிக்க வேண்டும். தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்” என்றார்.
இறுதியாகப் பேசிய தயாரிப்பாளர் சங்கர், “இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. எனது அம்மா, அப்பா, மனைவியின் பெற்றோர், சகோதரி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களும் ஊடகங்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
புதிய கதைக்களம், இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.