சாதி பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்த கிராம மக்கள் திடீரென்று மோதலில் ஈடுபட்டு பிரிந்து விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து இரு பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து பிரிந்த கிராமங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சியில் காளி வெங்கட் ஈடுபடுகிறார். அவரது நண்பரான நாயகன் அர்ஜூன் தாஸ், கிராமத்தில் இருந்து வெளியேறி, வெளியூரில் வாழலாம் என்று வலியுறுத்துகிறார். ஆனால், எந்த காலத்திலும் ஊரை விட்டு வெளியேறப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் காளி வெங்கட், திடீரென்று இறந்து விடுகிறார்.
அவரது இறப்பினால் ஊரே அதிர்ச்சியடைகிறது. இதற்கிடையே, காளி வெங்கட்டின் சடலத்தில் இருந்து அவ்வபோது வாயு வெளியேறுவதோடு, உடலும் அசைகிறது. இதனால், தன் நண்பர் இறக்கவில்லை என்று கருதும் அர்ஜூன் தாஸ், அவரது உடலை ஊர் பொது இடத்தில் உள்ள மரத்தடியில் எடுத்துச் சென்று வைக்க, ஊர் திடீரென்று அந்த உடலை சாமி என்று நம்ப ஆரம்பித்து விடுகிறது. இறந்தவரை சாமி என்று நம்பி, பிரிந்த ஊர் ஒன்றாக சேர்ந்து வணங்க தொடங்குகிறது. அதன் பிறகு என்ன நடந்தது ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘பாம்’.
காட்சிகளில் ஹீரோயின் இல்லை என்றாலும், கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அர்ஜூண் தாஸை பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக கச்சிதமாக பொருந்திருப்பவர் தனது அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
சில நிமிடங்கள் மட்டுமே இயல்பான கதாபாத்திரமாக வலம் வரும் காளி வெங்கட், பிறகு படம் முழுவதும் பிணமாக நடித்திருந்தாலும், அதை மிக பொறுமையாகவும், பொறுப்புணர்வோடும் கையாண்டு கவனம் ஈர்த்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிவாத்மிகா, சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், நாசர், ராட்சசன் சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பி.எம் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகியலோடு படமாக்கப்பட்டிருக்கிறது.
டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விஷால் வெங்கட், சாதியால் பிரிந்து கிடக்கும் ஊரை ஒன்று சேர்க்க போராடும் ஒருவரது வாயு எப்படி ஒன்று சேர்க்கிறது, என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறது.
திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், பலம் வாய்ந்த வசனங்கள் அந்த குறையை மறைத்து பார்வையாளர்களை கைதட்ட வைப்பதோடு, மூட நம்பிக்கை மற்றும் மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு சாட்டையடியாகவும், சாதி பிரிவினையில் மூழ்கியிருப்பவர்களை சிந்திக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘பாம்’ சிரிக்கவும், சிந்திக்கவும்.
ரேடிங் 3/5