தென்னிந்திய நடிகர் சங்கத் துணை தலைவராக பொறுப்பு வகிக்கும் பூச்சி எஸ்.முருகன்

தென்னிந்திய நடிகர் சங்கத் துணை தலைவராக பொறுப்பு வகிக்கும் பூச்சி எஸ்.முருகன் அவர்கள் தனது 15 வயது முதலே நாடக நடிகராக விளங்குபவர்.
அவரது தந்தை பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் மந்திரி குமாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரும் கலைமாமணி விருது பெற்றவர்.
தந்தையின் நாடகக் குழுவில் 15 வயதிலேயே இணைந்த பூச்சி முருகன் முதலில் வேடமிட்டது ஸ்த்ரீ பார்ட் என்னும் பெண் வேடம். வேலூரில் இருந்த அண்ணா கலையரங்கில் நடைபெற்ற அந்த நாடகத்தை மக்கள் தொடர்பாளரும் மூத்த பத்திரிகையாளருமான மவுனம் ரவி ரஞ்சிதம் இதழில் பாராட்டி எழுதி இருந்தார்.
1984 இல் அரசு ஊழியராக சேர்ந்த பின் அரசின் அனுமதி உடன் நடிக்க தொடங்கினார்.
தந்தையின் நாடகக் குழுவிலும் அரசு விழாக்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப கட்டுப்பாடு, எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகங்கள், பொருட்காட்சிகள், அரசு விழாக்கள் என இவரது நாடக பங்களிப்பு நீண்டது.
1989-91 காலகட்டங்களில் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு நாடகங்கள், கூட்டுறவுத்துறை, சிறுசேமிப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட நாடகங்களில் நடித்தார்.
தந்தையின் நாடக குழு மட்டுமல்லாமல் அப்போதைய புகழ்பெற்ற நாடக குழுக்களான அசோகன் நாடக குழு மற்றும் ராதாரவியின் நாடகக் குழுவிலும் நடித்து இருக்கிறார்.
குறிப்பாக தூக்கு மேடை, ரத்தக்கண்ணீர் நாடகங்களில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடித்தவர் அதன் பின் பூச்சி முருகன் நாடக மன்றம் என்ற பெயரில் தனி நாடகக்குழு தொடங்கி நடத்தினார்.
சன் குழுமம் சார்பில் கே டிவி தொடங்கப்பட்டபோது அதில் ஒளிபரப்பான அடடா அமர்க்களம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் 2 ஆண்டுகள் நடித்தவர். மேலும் கனவு கிராமம், மறைமுகம் உள்ளிட்ட தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
1987 முதல் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கும் பூச்சி முருகன் நான் பேச நினைப்பதெல்லாம், திருநெல்வேலி, ரஜினி முருகன், எலி, தெனாலிராமன், நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்.

Comments (0)
Add Comment