பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU) ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் அடுத்த திரைப்படமான ‘மஹாகாளி’ இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இப்படம், தற்போது கடைசி கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
RKD Studios சார்பில் ஆர்.கே. துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரசாந்த் வர்மாகதையையும் படைப்புத் திசையையும் வழங்கியுள்ள நிலையில், பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
படப்பிடிப்பின் முக்கிய கட்டமாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக, சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.
மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் பூமி ஷெட்டி நடித்துள்ளார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் தோற்றமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ள இப்படம், புராணக் கதையையும் நவீன திரைப்பட தொழில்நுட்பத்தையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகிறது. உலகத் தரத்திலான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவமைப்பிற்காக இப்படம் பிரத்யேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனித்து வருகிறார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்புடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டு தேதி, டீசர் மற்றும் பிற விளம்பர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த முக்கிய அத்தியாயமாக உருவாகும் ‘மஹாகாளி’, இந்திய சினிமாவின் மிகவும் லட்சியமான புராணப் படைப்புகளில் ஒன்றாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.