இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல்வேறு வகையில் தங்களது ஊருக்கு குடிநீரை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற மக்களின் முயற்சியின் பலனாக அங்கு தண்ணீர் ஓட்டம் இருப்பது கண்டறியப்படுகிறது. அந்த இடம் யோகி பாபுவின் வீடு என்பதால் ஊர் நன்மைக்காக அவரது வீட்டை கிராம மக்கள் கேட்கிறார்கள். அதற்கு சம்மதம் சொல்லும் யோகி பாபுவின் தாத்தா, போர் போடாமல் கிணறு வெட்டினால் இடத்தை கொடுப்பதாக சொல்கிறார். அதன்படி, ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் கிணறு தோன்றுகிறார்கள். அப்போது அந்த பள்ளத்தில் தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்புகள் கிடைக்கிறது.
இதையடுத்து அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தொல்லியல் துறை அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அந்த ஊர் முழுவதிலும் தங்களது ஆய்வுகளை விரிவுப்படுத்த திட்டமிடுகிறது. இதனால், அந்த ஊர் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் சூழல் ஏற்பட, ஊர் மக்களையும், தங்களது சொந்த மண்ணையும் காப்பாற்ற களத்தில் இறங்கும் யோகி பாபு, அதை எப்படி செய்தார் ? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘கெணத்த காணோம்’.
சிற்பி மற்றும் கோவில் பூசாரியாக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கமான தனது உடல் கேலி வசனங்களை தவிர்த்துவிட்டு மக்களை நல்வழிப்படுத்தும் மற்றும் மூடநம்பிக்கைகளை அகற்றும்படியான வசனங்களை பேசி கதையின் நாயகனாக மிளிர்கிறார். சொந்த ஊரை விட்டு செல்வது, உயிர் உடலை விட்டு செல்வதற்கு சமம், என்ற உணர்வுப்பூர்வமான வசனங்களை பேசி, மக்களின் சொந்த மண்ணை காப்பாற்ற போராடும் நாயகன் என்றாலும் அதை நகைச்சுவையோடு செய்து சிரிக்க வைக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், யோகி பாபுவின் காதலியாக சுட்டெரிக்கும் வெயிலில், வாடிப் போகாத மல்லிகையாக வலம் வருகிறார். ஆங்காங்கே தலைக்காட்டி சில வசனங்கள் பேசினாலும், அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் பெரிய இடம் இல்லை என்பதே உண்மை.
தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் கதாபாத்திரங்களுங்களுக்கு பொறுத்தமான தேர்வு.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு மூலம் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். அவர் வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. அதிலும், விசாரணை என்ற பெயரில் காவலர்கள் ஊர் மக்களை அடிக்கும் காட்சிகளில் மனுஷன் தன் டைமிங் வசனங்கள் மூலம் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைத்து விடுகிறார்.
மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், யோகி பாபுவின் அக்காவாக நடித்திருக்கும் நடிகை, ஊர் தலைவராக நடித்திருக்கும் நடிகர் உள்ளிட்ட அனைவரும் மண் சார்ந்த மக்களை பிரதிபலிக்கும் வகையில் இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தியாகராஜன், புழுதி படிந்த மண் மற்றும் தண்ணீர் இன்றி வாடி கிடக்கும் மக்களை எந்தவித கலப்படமும் இன்றி காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்களின் மனங்களை பிரதிபலிப்பவையாக பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ராமரின் பணி படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறதா! என்று ஆச்சரியப்பட வைக்கும் கிராமத்தில், தனது கைவண்ணத்தையும் காட்டி பாரட்டு பெறுகிறார் கலை இயக்குநர் சுபேனந்தர்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர் இன்றி தவிக்கும் கிராமங்களின் சோகமான கதையை, நகைச்சுவையாக சொன்னாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும்படி சொல்லியிருக்கிறார்.
யோகி பாபுவை கதையின் நாயகனாக முன்னிறுத்தினாலும், பரிட்சயம் இல்லாத பல நடிகர்களை அவருக்கு இணையாக நடிக்க வைத்து, அதை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையா, படம் முழுவதும் மனதுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை வீர தீரமாகவும், வன்முறை நிறைந்ததாகவும் சொல்பவர்களுக்கு மத்தியில், விபரம் அறியாத அம்மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், வெள்ளந்தியான குணத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையா, ஒரு கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை படம் பார்த்தவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘கெணத்த காணோம்’ சிரிக்க, சிந்திக்க.
ரேட்டிங் 3.3/5