காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சுதர்ஷன் கோவிந்த், காதல் மற்றும் காதலர்களுக்கான செயலி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் நாயகி அர்ச்சனா ரவி, குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ விரும்புவதோடு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார்.
இதற்கிடையே காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்குவதற்கு, போலியாக ஒரு பெண்ணை காதலித்து அதன் மூலம் காதல் பற்றி தெரிந்துக்கொள்ள நாயகன் முடிவு செய்கிறார். அதே போல், நாயகியும் காதல் கதை எழுதுவதற்காக போலியாக ஒருவரை காதலிக்க முடிவு செய்கிறார். இப்படி போலியாக காதலிக்க நினைக்கும் இவர்கள் ஒருவரை சந்தித்துக்கொள்கிறார்கள். இவர்களது போலியான காதல் பயணம், இருவரது எண்ணங்களையும், வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது, என்பது தான் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், ஆறடிக்கு மேலான உயரத்தில் ஆக்ஷன் ஹீரோவுக்கான அம்சங்களோடு இருந்தாலும், அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலுக்கு முன், காதலுக்குப் பின் என தனது தோற்றத்தில் மட்டும் இன்றி, நடிப்பிலும் வேறுபாட்டை காண்பித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், நடிப்பு, நடனம் என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்றவராக தெரிகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவி, நாயகனுக்கு பொறுத்தமான ஜோடியாக இருக்கிறார். நாயகனுக்கு இணையாக, திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பயணித்திருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரதோஷ் மற்றும் நோபல், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கல் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜி-யின் பணி காட்சிகளின் தரத்தை அதிகரிக்கச் செய்து காதலர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் மனதில் கடத்தியிருக்கிறது
அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும், கமர்ஷியல் அம்சங்களோடு கேட்க வைக்கிறது. பின்னணி இசை அளவு.
படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகர்ஜுனின் பணி படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
காதல் மீது நாட்டம் இல்லாதவர்களிடம் காதல் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளை மிக எளிமையாக கையாண்டிருக்கிறார்.
காதலை மட்டுமே மையப்படுத்திய கதை என்றாலும், அதை குடும்ப உறவுகளின் பின்னணியோடு சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும், புதுமையான முயற்சிகள் இன்றி திரைக்கதை பயணிப்பது படத்தை சற்று பலவீனமடைய செய்கிறது. இருந்தாலும், போலியாக காதலிக்கும் இருவரது மனதில் இருக்கும் உண்மையான காதல் வெளிப்படும் காட்சிகள் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.
மொத்தத்தில், ‘நீ ஃபாரெவர்’ (Nee Forever) காதலர்களுக்காக…
ரேட்டிங் 3/5
