‘கான் சிட்டி’ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் — “நான் தான் கிங்கு” பாடல் மாஸ் வைபில்!

92

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம், அதன் அடுத்தடுத்த அப்டேட்களால் கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான “ரா ரா ரங்கையா” மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் துள்ளலான இசையில், பாடலாசிரியர் மோகன் ராஜன் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், நாயகனின் ஆளுமை மற்றும் மாஸான குணாதிசயங்களை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஷான் ரோல்டன், கெலிதீ மற்றும் லலிதா சுதா ஆகியோரின் குரல்களில் வெளிவந்துள்ள இப்பாடல், இளைஞர்களைக் கவரும் ‘ஸ்டைலிஷ் பீட்ஸ்’களுடன் முதல் முறை கேட்டவுடனேயே ஈர்க்கிறது.

நகர வாழ்வின் பின்னணியில், கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களை, நகைச்சுவை மற்றும் பரபரப்பான திரைக்கதையுடன் ஒரு கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இந்தப் படம் பேசுகிறது. மங்களூர், சென்னை, மும்பை எனப் பல நகரங்களில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் அகிலன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முன்னணி ஓடிடி நிறுவனமான Netflix, “கான் சிட்டி” படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய விலைக்குக் கைப்பற்றியுள்ளது.

ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.