மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனம் தனது இரண்டாவது தயாரிப்புப் படமான “குட் நியூஸ்” திரைப்படத்தை சென்னையில் நடைபெற்ற பாரம்பரிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. குடும்ப உறவுகள், பாசம், நகைச்சுவை மற்றும் மனதை நெகிழ வைக்கும் தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகவுள்ளது.
படத்தின் துவக்க விழாவில் தமிழ் திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இயக்குநர் விஜய் முதல் காட்சிக்கான க்ளாப் அடித்து படத்தைத் தொடங்கி வைக்க, இயக்குநர் பாலா கேமராவை இயக்கி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்தார்.
சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தில் சாய்பிரபு ஜெயக்குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரமுருகன், “குட் நியூஸ்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கல்யாணி அனில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரவீண்குமார் ஒளிப்பதிவை கவனிக்க, கார்த்திக்வாசன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சித்துகுமார் இசையமைக்க, அர்ஜுன் பாபு படத்தொகுப்பாளராக செயல்படுகிறார். எல்.எம். தனசேகர் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், பி.ஆர்.ஓ ரேகா செய்தித் தொடர்புப் பணிகளை கவனிக்கிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் கூறுகையில், “உறவுகள் மற்றும் குடும்ப மதிப்புகளை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகும் திரைப்படம் தான் ‘குட் நியூஸ்’. கதையைக் கேட்ட தருணத்திலேயே இது அனைத்து வயதினரிடமும் இணைந்து செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது. திறமையான குழுவுடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். ரசிகர்களுக்கு மறக்க முடியாத குடும்ப பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவோம்” என்றார்.
இயக்குநர் நாகேந்திரமுருகன் பேசுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து இயக்குநராக அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். பாண்டிராஜ் சாரிடம் பணிபுரிந்த அனுபவம், குடும்பங்கள் விரும்பும் கதைகளை உருவாக்குவதற்கான புரிதலை எனக்கு வழங்கியது. ‘குட் நியூஸ்’ உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.




