ஜூலை 3-ஆம் தேதி வெளியாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘அருபீ’

17

பி.கே.ஆர். ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் புதிய ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘அருபீ’, வருகிற ஜூலை 3-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மலையாளத்தைச் சேர்ந்த புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியர் இயக்கியுள்ள இப்படம், மர்மம், திகில் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த விறுவிறுப்பான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் உருவாகியுள்ளது.

புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பில் பிரதீப் ராஜ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளதால், படத்தின் மீது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி பாதலா, சிந்து வர்மா, கிரண் ராஜ், கண்ணன் சாகர், விஜி பால், ஆதித்ய ராஜ், அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம், சுஜா ரோஜா, அஞ்சனா மோகன் மற்றும் ஏஞ்சல் மரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அருபீ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரள மாநிலம் கொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அழகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இயற்கைச் சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், திகில் நிறைந்த காட்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும் கொண்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மர்மம் மற்றும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்ட ‘அருபீ’, ஹாரர் திரைப்பட ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில், ஜூலை 3-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.