‘ஓ! சுகுமாரி’ ட்ரெய்லர் வெளியீடு… மின்சாரம் தாக்கும் நாயகியை மையமாகக் கொண்ட வித்தியாசமான காதல்-நகைச்சுவை கதை!

46

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓ! சுகுமாரி’திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியை இணைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளதாக ட்ரெய்லர் உறுதியளிக்கிறது.

அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார். திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தப் படம், புதுமையான கதைக்களத்தால் கவனம் ஈர்த்துள்ளது.

வெளியாகியுள்ள ட்ரெய்லரில், ‘தாமினி’ என்ற துடுக்கான இளம் பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. அவரை யாராவது தொட்டால் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ஏற்படும் விசித்திரமான நிலை காரணமாக, அந்த ஊர் மக்களே அவரைக் கண்டு அச்சப்படுகின்றனர். இந்த ரகசியத்தை மறைத்தபடி, அவரது குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு இந்த அசாதாரணமான உண்மையை அறியும் நாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடர்ந்து புதுமண தம்பதியினர் எதிர்கொள்ளும் கலகலப்பான சம்பவங்களும், அவர்களுக்கிடையே மலரும் காதலும் படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.

நகைச்சுவையுடன் கூடிய உணர்வுபூர்வமான திரைக்கதையை இயக்குநர் பரத் தர்ஷன் வடிவமைத்துள்ளார். கிராமத்து இளைஞனாக திரு வீர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், தனது கதாபாத்திரத்திற்கு புத்துணர்ச்சி சேர்த்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், தனக்கே உரிய இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அழகையும் திரையில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்களுடன் முரளிதர் கௌட், விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவிலும் பலம் குறைவில்லை. சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவில் கிராமத்து இயற்கை எழிலை அழகாக பதிவு செய்திருக்கிறார். பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் கதையின் கலகலப்பான மனநிலைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. திருமலா எம். திருப்பதி கலை இயக்கத்தையும், ஸ்ரீ வர பிரசாத் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

மொத்தத்தில், ‘ஓ! சுகுமாரி’ ட்ரெய்லர் வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘ஓ! சுகுமாரி’ திரைப்படம் ஜூலை 17 முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.