தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு

11

2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளுக்கான படைப்புகளைத் தேர்வு செய்யும் ஜூரி பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளை மதிப்பீடு செய்து விருதுகளுக்குத் தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பை நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி திரையுலக ஆளுமைகள் ஏற்றிருந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர், முழுநீள திரைப்படங்கள் (Feature Film) பிரிவுக்கான தேசிய விருது ஜூரியாகப் பணியாற்றினார். அதேபோல், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகள் அடங்கிய Non-Feature Film பிரிவுக்கான ஜூரியாக இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்.

2024-ஆம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழ் (CBFC) பெற்ற திரைப்படங்கள் மற்றும் படைப்புகளே இந்த தேசிய விருதுகளுக்கான பரிசீலனையில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைப் படைப்புகளை தேசிய அளவில் கௌரவிக்கும் இந்த விருதுகள், இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கான தேசிய திரைப்பட விருதுகளை, பிரம்மாண்டமான விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கம். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் இந்திய திரையுலகினரால் பெருமையுடன் கொண்டாடப்படும் முக்கியமான கலை விழாவாக திகழ்கிறது.