72ஆவது தேசிய திரைப்பட விருதில் ‘லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது!

8

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவான ‘லைஃப் இன் லூம்’ (Life in Loom) ஆவணப்படம், 72ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ‘நான் ஃபீச்சர் ஃபிலிம்’ (Non-Feature Film) பிரிவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை வென்று பெருமை சேர்த்துள்ளது.

இந்த ஆவணப்படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான எட்மண்ட் ரான்சன், தனது சிறப்பான ஒளிப்பதிவிற்காக இந்த உயரிய தேசிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இப்படத்தை பிரான்சிஸ் மார்கஸ் தயாரித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பு, கேமரா மற்றும் திரைப்பட உபகரணங்கள் வாடகை, போஸ்ட் புரொடக்ஷன், ஸ்டுடியோ வசதிகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக நம்பிக்கைக்குரிய நிறுவனமாக செயல்பட்டு வரும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட், தரமான மற்றும் உள்ளடக்கமிக்க படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்கஸ் தலைமையில், ‘ஓயீ’ திரைப்படம் மற்றும் தற்போது தேசிய விருது பெற்றுள்ள ‘லைஃப் இன் லூம்’ ஆவணப்படம் உள்ளிட்ட பல முக்கிய படைப்புகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவின் ஏழு மாநிலங்களில் வாழும் நெசவாளர்களின் வாழ்க்கை, அவர்களின் பாரம்பரிய கைத்தறி மரபுகள் மற்றும் தலைமுறைகள் கடந்து தொடரும் கைவினைப் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 100 நிமிட ஆவணப்படமான ‘லைஃப் இன் லூம்’, இந்திய நெசவு கலாச்சாரத்தின் செழுமையையும் அதன் தனித்துவத்தையும் ஆழமாக பதிவு செய்கிறது.

குஜராத்தின் புகழ்பெற்ற பதன் படோலா நெசவு மரபு முதல், ஒடிசாவின் போண்டா பழங்குடியினரின் ரிங்கா நெசவுவரை பல்வேறு பாரம்பரிய நெசவுத் தொழில்களை இந்த ஆவணப்படம் விரிவாக பதிவு செய்துள்ளது. சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வரும் சூழலிலும், பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய நெசவு முறைகளை பாதுகாக்க போராடும் கைவினைஞர்களின் அர்ப்பணிப்பையும் மன உறுதியையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது.

72ஆவது தேசிய திரைப்பட விருதில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தின் தரமான படைப்புகளுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இந்திய பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பண்பாட்டை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் முயற்சிக்கும் முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.

‘லைஃப் இன் லூம்’ஆவணப்படம் தேசிய மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பெற்ற முக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:

72வது தேசிய திரைப்பட விருதுகள் (2026) – சிறந்த ஒளிப்பதிவு (நான் ஃபீச்சர் ஃபிலிம்),
செலிபிரேட்டிங் இந்தியா ஃபிலிம் ஃபெஸ்டிவல் (2025) – சிறந்த ஆவணப்படம்,
18வது மும்பை சர்வதேச திரைப்பட விழா (MIFF) – இந்தியா இன் அம்ரித் கால் தேசிய போட்டிப் பிரிவில் சிறந்த ஆவணப்படம்,
54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), கோவா (2023) – அதிகாரப்பூர்வ தேர்வு,
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (2023) – சிறந்த அறிமுக இயக்குநர்,
தாகூர் சர்வதேச திரைப்பட விழா – சிறந்த ஆவணப்படம்,
தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சன் ஆஃப் ஈஸ்ட் விருது – தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்கஸுக்கு கௌரவ சாதனையாளர் விருது,
மதுரை சர்வதேச ஆவணப்பட விழா – அதிகாரப்பூர்வ தேர்வு.

இயக்குநர் எட்மண்ட் ரான்சன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் 85 நாட்களுக்கும் மேலாக பயணம் செய்து படப்பிடிப்பு நடத்தி, பாரம்பரிய நெசவாளர்களின் வாழ்க்கை, இயற்கையுடனான அவர்களின் உறவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நெசவு முறைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை அழகாக பதிவு செய்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த ஆவணப்படம் நிறைவு செய்யப்பட்டது. அதன் பின்னர், இந்தியா முழுவதும் நடைபெற்ற திரைப்பட விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

72வது தேசிய திரைப்பட விருதில் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரம், மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெருமைமிகு தருணம். தரமான திரைப்படத் தயாரிப்புக்கான அர்ப்பணிப்பையும், இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை உலக அரங்கில் கொண்டு செல்லும் அதன் உறுதியையும் மீண்டும் ஒருமுறை இந்த விருது உறுதிப்படுத்துகிறது. ‘லைஃப் இன் லூம்’ ஆவணப்படம், இந்திய கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் வாழ்வியல் மற்றும் தலைமுறைகள் கடந்து தொடரும் பாரம்பரியத்தின் நிலையான மரபை எதிர்கால சந்ததியினருக்காக பதிவு செய்திருக்கும் அரிய கலைப்படைப்பாக திகழ்கிறது.