பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடன் சேவையில் இணைந்த தனுஷ்… 30 ஆட்டோக்கள், 150 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; மாபெரும் ரத்ததான முகாம்!

11

இந்திய சினிமாவைத் தாண்டி ஹாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்துள்ள நடிகர் தனுஷ், நாளை (ஜூலை 28) தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் நலத்திட்ட விழா மற்றும் ரத்ததான முகாம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடந்த ஜூலை 26 அன்று சென்னை மஞ்சக்காரணையில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியா முழுவதிலுமிருந்து வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 150 ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல், 30 மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக 30 ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்டங்கள் மூலம் பல குடும்பங்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை விதைத்தார் தனுஷ்.

மேலும், 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்கள் உற்சாகமாக பங்கேற்று ரத்ததானம் செய்தனர். நூற்றுக்கணக்கான யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்ட இந்த முகாம், சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் விருந்தினர்களுக்காக காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்களை குடும்ப உறுப்பினர்களைப் போல உபசரித்த இந்த ஏற்பாடு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை சமூக நலத் திட்டங்களுடன் கொண்டாடி வரும் தனுஷ், இந்த ஆண்டும் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் ரத்ததானம் போன்ற மனிதநேய செயல்கள் மூலம் தனது ரசிகர்களுடன் சேர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டது, நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.